டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், வடக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று காலை, அடர்த்தியான முதல் மிக அடர்த்தியான மூடுபனி சூழ்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடர்ந்த மூடுபனியின் காரணமாக டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் பார்வைத்திறன் குறைவாக உள்ளது. டெல்லியைப் பொறுத்தவரை பாலம் பகுதியில் இன்று அதிகாலை 5:30 மணிக்கு பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, பார்வைத் திறன் வெறும் 25 மீட்டர் அளவிலும், சப்தர்ஜங் பகுதியில் 50 மீட்டர் வரையிலான அளவிலும் பதிவாகியுள்ளது. மற்ற நகரங்களை பொறுத்தவரை, அமிர்தசரஸ், கங்காநகர், பாட்டியாலா மற்றும் லக்னோவில் 25 மீட்டர் பார்வை அளவும், பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில், மிக அடர்த்தியான மூடுபனியால் பார்வை அளவு 0 ஆகவும் குறைந்தது.
இதையடுத்து, பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தில் இன்றும் நாளையும் அடர்த்தியான மூடுபனி காரணமாக, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசமான பனிமூட்டத்தால், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் தெருக்களில் வாகனங்கள் எச்சரிக்கையுடன் ஓட்டிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையமும் மூடுபனி எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதேவேளையில், தற்போது அனைத்து விமான சேவைகளும் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.