கேரளாவில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கேரள வெள்ளத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. புரண்டோடிய வெள்ளத்தால் பல பாலங்கள் தரைமட்டமாகின. வீடுகள் அப்படியே இடிந்து விழுந்த காட்சிகளையெல்லாம் நாம் வீடியோவாக பார்த்திருப்போம். கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழை கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இயற்கை பேரழிவை சந்தித்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சிக்கி 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கேரளா முழுவதும் வெள்ளத்தில் மிதந்தது. கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளா தற்போது முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் நாளை மற்றும் புதன்கிழமை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர் மற்றும் வயநாடு மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 64 முதல் 124 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஒட்டுமொத்த கேரளாவும் வெள்ளக்காடாக காட்சியளித்த நிலையில், தற்போது மீண்டும் கனமழை அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.