கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களை தியாகிகளாக கருதுங்கள் என்று இந்திய மருத்துவச் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
கொரோனா தொற்றால் நாடுமுழுவதும் கடந்த மார்ச் 22 ஆம் தேதிமுதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அரசின் ஒவ்வொரு துறைகளும் கொரோனாவை கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருந்தாலும் கொரோனா நோயாளிகளுக்கு அருகில் சென்று சிகிச்சையளித்து உயிர் பிழைக்க வைத்துக்கொண்டிருக்கும் மருத்துவர்களின் பணி மகத்தானது. அப்படி சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்து வருவது அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கி வருகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் (indian medical association) ”ஆயுதப்படைகளின் தியாகிகளுக்கு இணையாக கொரோனா தொற்று எற்பட்ட மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும். சிகிச்சையின்போது உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுக்கவேண்டும். உயிரிழந்த மருத்துவர்களை தியாகிகளாக கருத வேண்டும். இதற்கென்று தனி அமைப்பையும் ஏற்படுத்தவேண்டும். இன்னும் சில வாரங்களில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக இந்தியா மாறிவிடும். அதனால், முன்கூட்டியே எழுதுகிறோம்” என்று கடிதத்தின் மூலம் நியாயமான கோரிக்கையை வைத்துள்ளது இந்திய மருத்துவச் சங்கம்.
மேலும், கொரோனாவால் இதுவரை 87 ஆயிரம் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 573 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.