இந்தியா

ஒற்றை மோதிரத்தில் 7,801 வைரக்கற்கள்... ஹைதராபாத் நகை வியாபாரியின் சாதனை

ஒற்றை மோதிரத்தில் 7,801 வைரக்கற்கள்... ஹைதராபாத் நகை வியாபாரியின் சாதனை

webteam

ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஹால்மார்க் ஜூவல்லர்ஸ் அதிபர் கோட்டி ஸ்ரீகாந்த், 7,801 வைரக்கற்களுடன் பூவைப் போன்ற அழகிய ஒற்றை மோதிரத்தைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஒரு பென்சில் ஓவியமாக தொடங்கிய மோதிரம் செய்யும் பணிகள், 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தியப் பண்பாட்டின் அடிப்படையில், ஒரு பூவின் வடிவத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

"இந்தியாவில் பூக்களைக்கொண்டு இறைவனுக்கு வழிபாடு நடத்தும் பாரம்பரியம் இருந்துவருகிறது. பூக்கள் தூய்மையின் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றன. பல டிசைன்கள் செய்து கடைசியாக கேமிலியா பூவின் டிசனை தேர்ந்தெடுத்தோம். இது அனைவரையும் கவர்வதாக உள்ளது" என்றார் நகைக்கடை அதிபர் கோட்டி.

முதலில் ஒரு மோதிர வடிவத்தை உருவாக்கியதும், ஹால்மார்க் நகைக்கடை குழுவினர், அதில் எத்தனை வைரக் கற்களை வைக்கமுடியும் என கணினிவழியாக அடையாளம் கண்டனர். இதுபோன்ற அடிப்படை வடிவமைப்புப் பணிகளுக்கே 45 நாட்கள் உருண்டோடிவிட்டன. மோதிரத்தின் முதல்கட்ட வடிவம் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தயாரானது.

ஒவ்வொரு கட்டமாக மோதிரத்தை உருவாக்குவதற்கு பத்து மாதங்கள் செலவழித்துள்ளனர். நாம் இப்போது பார்க்கும் அழகிய மோதிரம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முழுமையடைந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு ஹால்மார்க் நகைக்கடையைத் தொடங்கிய கோட்டி ஸ்ரீகாந்த், தன் பிராண்ட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் கின்னஸ் சாதனை செய்யத் திட்டமிட்டார்.