இந்தியா

ஓட்டுக்காக என்னை சிலுவையில் அறைய விரும்புகிறார்கள் : விஜய் மல்லையா

ஓட்டுக்காக என்னை சிலுவையில் அறைய விரும்புகிறார்கள் : விஜய் மல்லையா

rajakannan

ஓட்டுக்காக இந்திய அரசு என்னை சிலுவையில் ஏற்ற விரும்புகிறது என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

தொழிலதிபர் விஜய் மல்லையா ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவிற்கு கடனை பெற்றுவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதனையடுத்து கடனை திரும்ப செலுத்தாத காரணத்தினால் பல வங்கிகள் விஜய் மல்லையா மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டையும் மத்திய அரசு முடக்கியது. 

இதனிடையே கடன்மோசடி வழக்கில் அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகமால் இருந்ததால் அவரை தேடப்படும் குற்றவாளியாகவே நீதிமன்றம் அறிவித்தது. தொடர்ந்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை திரும்ப செலுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக சமீபத்தில் விஜய் மல்லையா தெரிவித்து இருந்தார். இருப்பினும் இதில் அரசியல் தலையீடு இருந்தால் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து, மல்லையா பெற்ற கடனுக்காக இந்தியாவில் உள்ள அவரின் சொத்துக்களை ஏலம் விட்டு ரூ.963 கோடி பணத்தை எஸ்பிஐ மீட்டது. 

இதுஒருபுறம் இருக்க, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கு விசாரணையில், பிரிட்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம், மல்லையா தற்போது தங்கியுள்ள பங்களா உள்பட அனைத்து சொத்துக்களிலும் பிரிட்டன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடியும். லண்டன் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளும் வரவேற்பு தெரிவித்து இருந்தன.

இந்நிலையில், லண்டனில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “இங்கிலாந்தில் உள்ள எனது சொத்து விவரங்களை லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருக்கிறேன். எனவே அவற்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து வங்கிகளிடம் ஒப்படைக்கலாம். சில கார்கள், சில நகைகள் உள்ளது. என்னுடைய வீட்டிற்கு அவர்கள் வரவேண்டிய அவசியமில்லை. நானே அவற்றை ஒப்படைக்கிறேன். அதற்கான நாள், நேரம் மற்றும் இடத்தை மட்டும் என்னிடம் தெரிவிக்கட்டும். ஆனால், என்னுடைய குழந்தைகளுக்கு சொந்தமான ஆடம்பர வீடு, லண்டனில் உள்ள எனது தாயாருக்கு சொந்தமான வீடு ஆகியவற்றை அவர்களால் தொடமுடியாது. இந்தியன் எம்பிரஸ் சுற்றுலா கப்பல் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு சொந்தமானது இல்லை. அது மத்திய கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது. 

நான் தப்பித்துச் சென்றுவிட்டதாக கவலைப்படும் சிலர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 1,37,31 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதை மறந்துவிடுகிறார்கள். அந்தப் பணமே எல்லா வங்கிகளுக்கும் போதுமானதாகும். அதனால், இங்கிலாந்தில் உள்ள சொத்துக்கள் உட்பட மற்றவை குறித்து யாரும் கேள்வி எழுப்ப தேவையில்லை. நான் எப்பொழுதுமே இங்கிலாந்தின் குடிமகனாகவே இருந்துள்ளேன். இந்தியாவின் குடியுரிமை பெற்றவனாக இல்லை. அதனால், நான் எங்கு திரும்பி வரவேண்டும்? இதில் தப்பிச் செல்வது என்பது எங்கிருந்து வருகிறது?. இது அரசியலுக்காகவே பெரிதாக்கப்படுகிறது.

தற்போது இந்த ஆண்டு தேர்தலுக்கானது. அவர்கள் என்னை திரும்ப இந்தியாவிற்கு கொண்டு வந்து என்னை சிலுவையில் ஏற்றுவார்கள் என்று நினைக்கிறேன். அதனால், அதிக ஓட்டுகளை பெறுவார்கள் என்றும் நம்புகிறேன்” என்றார்.