இந்தியா

"நாங்கள் அவ்வளவு வலியுறுத்தியும், மத்திய அரசு கேட்கவில்லை" - இந்திய அறிவியலாளர்கள் வேதனை

"நாங்கள் அவ்வளவு வலியுறுத்தியும், மத்திய அரசு கேட்கவில்லை" - இந்திய அறிவியலாளர்கள் வேதனை

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் உருவாகிவருகின்றனர். வைரஸின் அமைப்பும், இந்தியாவில் புதிது புதிதாக உருமாறி, நபருக்கேற்றார் போல புதுப்புது அறிகுறிகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இந்திய அரசு கொரோனா தரவுகளை முறையாக வெளியிடப்படாமல் இருக்கிறதென குறிப்பிடுகின்றனர் நூற்றுக்கணக்கான இந்திய அறிவியலாளர்கள்.

இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்துக்கும் அதிகமென கூறி, இந்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த எண்ணிக்கையில் உண்மைத்தன்மை இல்லையெனக் கூறி, உண்மையான எண்ணிக்கையை மத்திய அரசு கூற வேண்டுமென, 300 க்கும் மேற்பட்ட இந்திய அறிவியலாளர்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

(புகைப்படம் : Reuters)

அந்தக் கடிதத்தில், “கொரோனா இந்தியாவில் பரவ ஆரம்பித்த நாளிலிருந்து இருக்கக்கூடிய ஐ.சி.எம்.ஆர். தரவுகளை, உரிய பாதுகாப்போடு பொதுப்படுத்துங்கள். ஒவ்வொரு நாளும் இந்தியாவில் நிலைமை மோசமாகிக்கொண்டே போகின்றது. இப்போதைய சூழலில், தரவுகள் இருந்தால் மட்டும்தான், நோய் பரவும் விகிதத்தை அறிவியலாளர்களாகிய எங்களால் அறியமுடியும். அதை அறிந்தால்தான், அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை, எங்களால் கணித்து சொல்ல முடியும். இதேபோல குணமாணவர்கள் எண்ணிக்கையும் முழுமையாக இருந்தால்தான், வைரஸின் தீவிரத்தன்மையை அறியமுடியும். நோயாளிகள் விவரம் மட்டுமன்றி, தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் பற்றிய விவரமும் வெளிப்படையாக இருக்க வேண்டும். அப்படி அது கிடைக்கும்பட்சத்தில், மக்களில் எவ்வளவு பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது என்பதும் தெரியவரும். அது தெரியவந்தால், நோயை எவ்வளவு சீக்கிரம் நாம் கடக்க முடியும் என்ற விவரமும் தெரியவந்துவிடும்” எனக்குறிப்பிட்டுள்ளனர்.

இதுமட்டுமன்றி, இந்தியாவை சேர்ந்த INSACOG எனப்படும் கோவிட் – 19 குறித்து ஆய்வு செய்ய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு, மத்திய அரசின் நேரடி பார்வையின் கீழ் இயங்கிவரும் அறிவியலாளர்கள் குழுவை சேர்ந்தவர்கள், கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே, 'இனிவரும் நாள்களில் சூழல் மோசமாகலாம்' என எச்சரித்ததாக, ரீயுட்டர்ஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனாவின் உருமாறும் தன்மை குறித்தும், அது பரவும் வேகம் குறித்தும் எவ்வளவோ எச்சரித்தும், அரசுதான் அதை கண்டுகொள்ளவில்லை என கூறியிருக்கிறார்கள் அவர்கள். இவ்வளவு எச்சரிக்கைக்குப் பின்னரும், பிரதமரின் அனுமதியோடு, கூட்டம் கூட்டமாக மாஸ்க் அணியாமல் மக்கள் மதக்கூட்டங்களிலும், தேர்தல் கூட்டங்களிலும் பங்கெடுத்தனர் என்பதை அறிவியலாளர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளனர்.

நிலைமை மோசமாவதை தடுக்க, பொதுமுடக்கத்தை உடனடியாக அமல்படுத்தும்படி பிரதமரை தாங்கள் வலியுறுத்தியதாக கூறும் அவர்கள், கடந்த வருடம் இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து அமலில் இருந்த முழுபொதுமுடக்கம் ஏற்படுத்திய பொருளாதார பின்னடைவை காரணம் காட்டி, “பொதுமுடக்கம் என்பது, கடைசி கட்ட முயற்சியாகத்தான் இருக்க வேண்டும்” என்பதில் மோடி விடாப்பிடியாக இருந்தார் என கூறியுள்ளனர்.

இப்படி, எதுவுமே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என சொல்லும் அவர்கள், இறுதியாக, “இங்கே இந்தியாவில் எனக்கு நிலைமை மிக மிக மோசமாக போய்விட்டது. மக்களும், அறிவியலாளர்களைவிட அரசியல் கட்சிக்காரர்கள் சொல்வதையே அதிகம் கேட்கின்றனர்” என அந்த ஆங்கில பத்திரிகையில், தங்களின் வேதனையை பதிவுசெய்திருக்கின்றனர். 

உண்மையிலேயே மோடி, அறிவியலாளர்களின் இந்தளவுக்கு உறுதியான அறிவுரைக்குப் பிறகும், அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் நாட்டை ஆபத்துக்கு தள்ளினாரா என்பதை அறிய, ரீயூட்டர்ஸ் பத்திரிகை நிறுவனத்தினர், மோடியின் அலுவலகத்தை அனுகியிருக்கின்றனர். ஆனால், இதற்கும் மோடி அலுவலகம் மௌனம்காத்துவிட்டதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். அரசு தரப்பின் இந்த தொடர் மௌனம், எப்போது கலையும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்!