எலான் மஸ்க், முகேஷ் அம்பானி எக்ஸ் தளம்
இந்தியா

செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு|எலான் மஸ்க்கிற்கு மத்தியஅரசு கிரீன்சிக்னல்.. அம்பானிக்கு சிக்கல்!

செயற்கைக்கோள் இணையச் சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம் அல்லாமல் நிர்வாக ரீதியாக வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்.

Prakash J

உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க்கின் ஸ்டாா்லிங்க், அமேசான் நிறுவனத்தின் குப்பியா், பாரதி குழுமத்தின் ஒன்வெப் யூடெல்சாட் மற்றும் எஸ்இஎஸ்-ஜியோ இணைந்து நடத்தும் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் செயற்கைக்கோள்கள் மூலம் தொலைத்தொடா்பு சேவைகள் வழங்க ஆா்வம்காட்டி வருகின்றன. இதனால் ஏற்கெனவே நிலத்தில் டவா்கள் அமைத்து தொலைத்தொடா்பு சேவைகள் வழங்கிவரும் நிறுவனங்களுக்கும் செயற்கைக்கோள் மூலம் தொலைத்தொடா்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் நேரடி போட்டி ஏற்படவுள்ளது. இதை கருத்தில்கொண்டு இந்த இரு வகையான நிறுவனங்களுக்கும் சமமான வணிக சந்தையை ஏற்படுத்தித் தர மத்திய தொலைத்தொடா்புத் துறை முனைப்புக் காட்டி வருகிறது. ஆனால், இந்த விஷயத்தில், டிராய் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக இந்திய நிறுவனங்கள் (குறிப்பாக ஜியோ) சில குற்றஞ்சாட்டி உள்ளன.

இதற்கு, 'ஸ்டார் லிங்க்' தலைவர் எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதனால் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் வெடித்தது. இதுதொடா்பாக தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (டிராய்) ஜியோ நிறுவனம் கோரிக்கை வைத்தது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ’இந்தியாவில் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு, ஏலம் முறையில் நடைபெறாது’ என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதாவது மத்திய அரசு, செயற்கைக்கோள் இணையச் சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம் அல்லாமல் நிர்வாக ரீதியாக வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார். இது, எலான் மஸ்க்கின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: சிகை அலங்காரம் செய்த காதலி.. கோபப்பட்ட காதலன்.. அமெரிக்காவில் அரங்கேறிய கொடூரம்!

இந்தியாவில் எலான் மஸ்க், தனது வர்த்தகத்தைப் பலமுறை கொண்டுவர முயற்சி செய்து தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்துவரும் வேளையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்குப் பின்பு இந்திய அரசு மேற்கொண்ட முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு எலான் மஸ்கு வரவேற்பு அளித்துள்ளார். மேலும், மத்திய அரசின் இந்த அறிவிப்பினால், இந்தியாவில் உடனடியாக ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகப்படுத்த முடியும்.

அதேநேரத்தில், இந்த முடிவு செயற்கைக்கோள் வாயிலாக பிராட்பேன்ட் சேவை வழங்க முயற்சி செய்யும் ஜியோவுக்கும், ஏர்டெல்லுக்கும் பெரும் தோல்வியாக அமையலாம். இந்த சேவைக்காக ஜியோ மற்றும் ஏர்டெல் பெரும் முதலீட்டையும், கூட்டணியையும் அமைத்துள்ளது.

எலான் மஸ்க்

இவ்விவகாரம் குறித்து இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள TRAI-இன் பரிந்துரைகளை பொறுத்து செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் எவ்வாறு ஒதுக்கப்படும் என்பதில் இறுதி முடிவு தெரியவரும் என கூறப்படுகிறது. அலைக்கற்றையானது குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு, நிர்வாக அடிப்படையில் விற்பனை செய்யப்படும் எனவும், டிராய் இதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு சென்ற வடகொரிய ராணுவம்.. ஆபாச படம் பார்க்கும் வீரர்கள்!