இந்தியா

குறைந்த சம்பளமே போதும்..எங்களுக்கு நிம்மதியே முக்கியம்: இந்திய ஊழியர்கள் எடுக்கும் முடிவு!

குறைந்த சம்பளமே போதும்..எங்களுக்கு நிம்மதியே முக்கியம்: இந்திய ஊழியர்கள் எடுக்கும் முடிவு!

JananiGovindhan

இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பே கிடைப்பதில்லை என்ற பெருவாரியான மக்கள் கருத்து தெரிவிப்பதுண்டு. ஆனால் மனநல ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பெரும்பாலான ஊழியர்கள் அதிக சம்பளத்தில் கிடைக்கும் வேலைகளை தவிர்ப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

அதன்படி 88 சதவிகித இந்திய ஊழியர்கள் மனநல ஆரோக்கியத்துக்காக அதிகளவில் கிடைக்கும் சம்பளத்துக்கு பதிலாக குறைந்த அளவில் கிடைக்கும் சம்பளம் கொண்ட வேலையையே தேர்வு செய்கிறார்கள் என்றும் இதனால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதோடு, தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக இருப்பாக தெரிவித்திருக்கிறார்கள் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மேலாண்மை தீர்வுக்கான UKG என்ற நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் 25 சதவிகித ஊழியர்கள் தங்களது பணியில் அதீத சுமை இருப்பதாகவும், 26 சதவிகிதத்தினர் வேலைப்பளுவால் மிகவும் சோர்ந்துப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்களாம். ஏனெனில் கொரோனா பரவலால் வந்த ஊரடங்கின் மூலம் தங்களுக்கான மனநல ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால், இந்திய ஊழியர்கள் அதிக சம்பளம் கொண்ட வேலைக்கு பதிலாக தனிப்பட்ட கவனத்தை செலுத்தத் தொடங்கி இருக்கிறார்களாம்.

இது தொடர்பாக ஃபினான்சியல் எக்ஸ்பிரஸிடம் பேசியுள்ள UKG நிறுவனத்தின் இந்தியாவுக்கான மேலாளரான சுமீத் தோஷி, “பெரும்பாலான ஊழியர்கள் தங்களது முந்தைய பணியில் கிடைத்த சம்பளத்தை விட ஒப்பீட்டளவில் குறைவான சம்பளம் கிடைத்தாலே போதும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.” என தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆய்வுக்காக நிறுவனங்களின் மேலாளர்கள் உட்பட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபிரான்ஸ், கனடா மற்றும் ஜெர்மனி என 10 நாடுகளை சேர்ந்த 2,200 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வேலை வாய்ப்பு, பணி நிமித்தமான அழுத்தங்கள், மனநல ஆரோக்கியம், வாரத்தில் நான்கு வேலை நாட்கள், ஊதிய உயர்வு போன்றவை குறித்த கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. இதில் 200 இந்திய ஊழியர்களும் அடங்குவர் என UKG நிறுவனம் கூறியிருக்கிறது.