பாரதிய ஜனதா கட்சியையும், மதவாத அரசியலையும் மக்கள் வெறுக்கிறார்கள் என்பதையே டெல்லி தேர்தல் முடிவுகள் காட்டுவதாக எம்.பி டி.ராஜா தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான டி.ராஜா புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது. தற்போது கிடைத்த முன்னணி நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சியானது அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு நபர்களை களமிறக்கியது.
ஆனால் டெல்லி மக்கள் பாரதிய ஜனதா கட்சியையும், மதவாத அரசியலையும், பிரித்தாளும் சூழ்நிலைகளையும் வெறுக்கிறார்கள் என்பதையே இந்த முன்னனி நிலவரங்கள் காட்டுகின்றன.
அதே நேரத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மக்களுக்கு இலவச குடிநீர், மின்சாரம், பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட திட்டங்களை அளித்துள்ளார். அதற்கான வரவேற்பால் தான் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியானது முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது” என்றார்.