இந்தியாவில் ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதையடுத்து அவர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அண்மையில் ஈரான் சென்று திரும்பிய அவரது தந்தைக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது, ராணுவ வீரருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர் பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை விடுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் தெஹ்ரான், க்வாம் உள்ளிட்ட இடங்களில் தவிக்கும் இந்தியர்களில் 250-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த எண்ணிக்கையை இந்திய வெளியுறவுத்துறை உறுதிசெய்ய மறுத்த போதிலும், பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக இந்தியாவில் இதுவரை 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் 147 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.