இந்தியா

1200 கி.மீ மாரத்தான் போட்டி- தூரத்தை கடந்த 56 வயது ராணுவ வீரர் 

webteam

56 வயது இந்திய ராணுவ அதிகாரி பிரான்சு நாட்டில் நடைபெற்ற பழமை வாய்ந்த மாரத்தான் சைக்கிள் போட்டியில் பங்கேற்று பந்தைய தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பணி புரிந்து வருபவர் அனில் பூரி (56). இவர் பிரான்சு நாட்டில் நடைபெற்று வரும் பழமை வாய்ந்த மாரத்தான் சைக்கிள் போட்டியில் பங்கேற்றார். அதாவது பிரான்சு நாட்டில் 1931ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் பாரிஸ்-பிரஸ்ட்-பாரிஸ் மாரத்தான் சைக்கிள் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் பந்தைய தூரம் 1200 கிலோ மீட்டர் ஆகும். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இடைவிடாமல் சைக்கிளில் பயணித்து பந்தைய தூரத்தை கடக்க வேண்டும். 

இந்த மாரத்தான் சைக்கிள் போட்டியில் இந்திய ராணுவ அதிகாரி அனில் பூரி பங்கேற்று பந்தைய தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார். இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது. அதில், “ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரல் பதவியிலிருக்கும் அதிகாரி ஒருவர் முதல் முறையாக பிரான்சின் பழமை வாய்ந்த மாரத்தான் சைக்கிள் பந்தைய தூரத்தை கடந்துள்ளார். 56 வயதான இவர் பந்தைய தூரத்தை 90 மணி நேரமும் இடைவிடாமல் சைக்கிளில் பயணம் செய்து கடந்து அசத்தியுள்ளார். இவர் இந்த 90 மணி நேரம் தூங்காமல் பந்தைய தூரத்தை எட்டியுள்ளார்” எனப் பதிவிடப் பட்டுள்ளது.