உலக நாடுகளுக்கு இணையான பல அதிநவீன ஆயுதங்களை நமது இந்திய அரசும் கட்டமைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தற்கொலைப் படை ட்ரோன் ஆயுதமான நாகஸ்த்ரா-1, விரைவில் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட இருக்கிறது.
நாக்பூரில் உள்ள சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்த ட்ரோன்களை உருவாக்கி உள்ளது. முதற்கட்டமாக இந்த ரகத்தில் சுமார் 480 ட்ரோன்களை வாங்க இந்திய ராணுவம் ஆர்டர் கொடுத்துள்ளது.
இதுதொடர்பான இறுதிக்கட்ட ஆய்வு, கடந்த மே 20-25 தேதிகளில் நிறைவடைந்த நிலையில், புல்கானில் உள்ள ராணுவ தளத்திற்கு இப்போது முதற்கட்டமாக 120 ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நாகாஸ்ட்ரா-1 ட்ரோன்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துல்லியமான தாக்குதல்களை நடத்துகிறது.
இது, இரண்டு மீட்டர்கள் வரை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் சிறப்பை பெற்றுள்ளது. ஒருமுறை பறக்கத் தொடங்கினால் சுமார் 30 நிமிடங்கள் வரை இதனால் தொடர்ந்து பறக்க முடியும். மேலும், 15 கிமீ தொலைவில் உள்ள டார்கெட்களையும் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கும் திறன் படைத்தது. Autonomous மோடில் இதன் திறனை 30 கிமீ வரை நீட்டிக்க முடியும். இதில் மின்சார உந்துவிசை அமைப்பு இருப்பதால், நாகஸ்த்ரா-1 பாயும்போது மிகக் குறைந்த ஒலி மட்டுமே எழும்பும். மேலும், இது 200 மீட்டருக்கும் மேல் பறந்தால் இதை ரேடார் மூலமும் கண்டறிய முடியாது. இப்படியொரு ட்ரோன் தாக்க வருகிறது என்பதை எதிரிகள் உணரும் முன்பே மிஷனை நாகஸ்த்ரா-1 வெற்றிகரமாக தாக்கி முடித்துவிடும்.
இந்த ட்ரோன்களில், பகல் நேரம் தவிர்த்து, இரவுப் பொழுதிலும் கண்காணிக்கக்கூடிய சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இலக்குகளைத் தாக்கும்போது வெடித்துச் சிதறும் வகையில்,1 கிலோ ஆயுதங்களையும் ஏற்றிச் செல்லும் ஆற்றல் படைத்தது. ஒருவேளை, தவறான இலக்கை நோக்கி ட்ரோன்கள் தெரியாமல் லான்ச் ஆகிவிட்டாலும் கடைசி நேரத்தில் அதை நிறுத்தும் வசதியும் உள்ளது. உலகெங்கும் இதுபோன்ற ட்ரோன்கள் இருக்கிறதென்றாலும் அவற்றை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இந்த நாகஸ்த்ரா-1 ட்ரோன்களில் பாராசூட் வசதி இருக்கிறது. இதன்மூலம் ஒருமுறை பயன்படுத்திய ட்ரோன்களையே நம்மால் மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.
இதுவே மற்ற ட்ரோன்களில் இருந்து இதைத் தனித்துக் காட்டுகிறது. இந்த நாகஸ்த்ரா-1வின் மொத்த எடையே 30 கிலோ தான். நமது நாட்டின் வடக்குப் பகுதியில் ட்ரோன் நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதைச் சமாளிக்க இந்த நாகஸ்த்ரா-1 ட்ரோன்கள் உதவும் என்றே ராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆர்மீனியா, அஜர்பைஜான், சிரியா, சவூதி அரேபியா, ரஷ்யா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளின் சமீபத்திய போர்களில் நாகஸ்த்ரா-1 ட்ரோன்கள் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்தே, இந்திய ராணுவத்தில் இத்தகைய ட்ரோன்கள் சேர்க்கப்பட உள்ளது.