மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி பாரத் ஜோடோ நியாய யாத்ராவை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கி மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நாகாலாந்தின் சீபோபோசோவில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி பேசும்போது...
”கடந்த ஆண்டு நடைபெற்ற 'பாரத் ஜோடோ யாத்ரா' ஒரு வரலாற்றுப் பயணம். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பயணிக்கும்போது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி அல்லது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பயணிக்க வேண்டும் என்று மக்கள் கூறினர். அதன் படி, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பயணிக்க முடிவு செய்யப்பட்டது. சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி என்பதே பாரத் ஜோடோ நியாய யாத்ராவில் நோக்கம்.
மணிப்பூருக்கு நிறைய அநீதி இழைக்கப்பட்டதால், மணிப்பூரிலிருந்து இந்தப் பயணத்தைத் தொடங்கினோம். இந்திய மாநிலத்தில் பல மாதங்களாக வன்முறை நடப்பது இதுவே முதல் முறை, ஆனால் பிரதமர் அங்கு கூட செல்லவில்லை.நாகாலாந்து மக்களுக்கும் பிரதமர் உறுதியளித்தார். ஆனால், அந்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகியவை ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை முழுக்க முழுக்க அரசியல் ஆக்கிவிட்டன. இது ஆர்எஸ்எஸ் பாஜக விழா, அதனால்தான் அந்த விழாவில் பங்கேற்பது காங்கிரசுக்கு கடினம். 2024-ல் பாஜகவை வீழ்த்துவதில் இந்தியக் கூட்டணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாரத் ஜோடோ நியாய் யாத்திரை என்பது ஒரு கருத்தியல் யாத்திரை, இது வெளிப்படையாக இந்த நாட்டில் நடக்கும் மிகப்பெரிய அநீதியின் பிரச்சினைகளை கேள்வியெழுப்பும் ஒரு யாத்திரை.
இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நிராகரித்தது , இந்தியா கூட்டணியில் இருந்து விலகி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என்ற கருத்து ஊடகங்களில் மிகைப்படுத்தி காட்டப்படுகின்றன. இந்தியா கூட்டணியில் இது போன்ற சிறு பிரச்னைகள் தீர்க்கப்பட்டு ஒன்றாக பாஜகவுக்கு எதிராக போட்டியிட்டு தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.