2023ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 90 கோடி பேர் இண்டெர்நெட் பயன்படுத்துவார்கள் என ஐ.டி மற்றும் நெட்வொர்க் நிறுவனமான சிஸ்கோ கணித்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் மயம் என்பது நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. அனைத்து துறைகளுமே டிஜிட்டல் உலகை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. வருங்காலத்தில் பேப்பர்களின் பயன்பாடு பெரும்பாலும் குறைந்து போகலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் 2023ஆம் ஆண்டு டிஜிட்டல் மயம் உச்சத்திற்கு வரும் என சிஸ்கோ நிறுவனம் கணித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தற்போது இந்தியாவில் 50 கோடிக்கும் மேற்பட்டோர் இண்டெர்நெட் சேவையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 907 மில்லியனாக, அதாவது 90 கோடியே 70 லட்சமாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 64% ஆகும். 2023ஆம் ஆண்டில் 966 மில்லியன் இந்தியர்கள் மொபைல் போன் பயன்படுத்துவார்கள் எனவும், 2018ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 763 மில்லியன் இந்தியர்கள் மொபைல் பயன்படுத்துவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் 781 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் மூலம் இண்டெர்நெட் சேவை இணைக்கப்பட்டிருக்கும் எனவும், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட மற்ற தொழில்நுட்பக் கருவிகள் மூலம் 255.8 மில்லியன் இண்டெர்நெட் சேவைகள் இணைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் சிம் கார்டு உள்ளிட்ட நெட்வொர்க் கருவிகளின் பயன்பாடு 210 கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த ஆண்டில் 67.2 மில்லியன் 5ஜி சேவைகளும் இந்தியாவில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.