இந்தியா

“சரிந்த மோடியின் பாப்புலாரிட்டி.. முன்னிலை பெறும் யோகி” - இந்தியா டுடே ஆய்வு சொல்வதென்ன?

“சரிந்த மோடியின் பாப்புலாரிட்டி.. முன்னிலை பெறும் யோகி” - இந்தியா டுடே ஆய்வு சொல்வதென்ன?

PT WEB

பிரதமர் நரேந்திர மோடியின் பாப்புலாரிட்டி விகிதம் 66 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக குறைந்துள்ளது என 'மூட் ஆஃப் நேஷன்' நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா டுடேவின் 'மூட் ஆஃப் நேஷன்' சார்பில் கடந்த ஜூலை 10 முதல் 22 வரையில் பல்வேறு கேள்விகளுடன் 14,599 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 19 மாநிலங்களில், 115 நாடாளுமன்ற மற்றும் 230 சட்டமன்றத் தொகுதிகளில் இந்தக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் 71 சதவிகிதம் பேர் கிராமபுறங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆய்வில் பிரதமர் மோடியின் பாப்புலாரிட்டி விகிதம் 66 சதவீதத்திலிருந்து 24சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையை மத்திய அரசு கையாண்ட விதம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது தான் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா முதல் அலைக்கும், இரண்டாம் அலைக்குமான மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கேட்கபட்டபோது, முதல் அலையை சிறப்பாக கையாண்டதாக 73 சதவீதம் பேர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.

இரண்டாம் அலை குறித்த ஆய்வில் அது 49சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அரசின் தரவுகளைக்காட்டிலும் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக 71சதவீதம் பேர் கருதுகின்றனர். 44 சதவீதம் பேர் இரண்டாம் அலையை மோசமாக கையாண்டதற்கு மத்திய அரசுமட்டுமல்ல மாநில அரசும் தான் காரணம் என தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவை மோடி அரசின் மிகப்பெரிய தோல்வி என்று 29 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல வேலையில்லா திண்டாட்டம் இந்திய அரசின் இரண்டாவது மிகப்பெரிய தோல்வி என சுமார் 23 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு 11சதவீதம் மக்கள் யோகி ஆதித்யநாத்தை தேர்வு செய்துள்ளனர். 10 சதவீதம் பேர் ராகுல்காந்திக்கு வாக்களித்துள்ளனர். ஆனால், முதல்வர்கள் பட்டியலில் வைத்து பார்க்கும்போது யோகி ஆதித்யநாத் 7 ம் இடத்தில் இருக்கிறார். 42 சதவீத்ததுடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதலிடத்தில் இருக்கிறார்.