இந்தியா

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தம்?

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தம்?

webteam

ரூ.2000 நோட்டை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளதாகவும், அதன் பயன்பாட்டை மெல்ல மெல்ல குறைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2016ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு பணமதிப்பிழப்பை அறிவித்தது. அதன்படி அப்போது பயன்பாட்டில் இருந்த ரூ.500. ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அந்த நேரத்தில் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. தட்டுப்பாட்டை போக்க 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தது. 

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தன. ரூ.2000 நோட்டுகள் அறிமுகமானால் அதை எளிதில் பதுக்கிவைக்க முடியும் எனவும், வரி ஏய்ப்பாளர்களுக்கு இது சாதகமாக அமைந்துவிடும் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர். தற்போது அது உண்மையாக ஆகிவிட்டதோ என்ற எண்ணத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ரூ.2000 நோட்டை அச்சிடுவதை மத்திய அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாத நிலவரத்தின் படி, நிறைய நகரங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. தேர்தல் எதிர்வரும் நேரத்தில் பணம் பதுக்கப்பட்டிருக்கலாம் என மத்திய அரசு சந்தேகித்தது. அதற்கு ஏற்றார் போல அப்போது நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் நிறைய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதற்கான நடவடிக்கையாகவே தற்போது 2000 ரூபாய் நோட்டை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மார்ச் 2018ன் படி ரிசர்வ் வங்கி ரூ.18.03 லட்சம் கோடியை புழக்கத்தில் விட்டது. அதில் 37சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் 43சதவீதம் 500 ரூபாய் நோட்டுகள். மற்ற தொகைகள் மீதி சதவீதத்துக்குள் அடங்கியது. இந்நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளின் வரத்தை குறைப்பதால் ரூ.500 நோட்டை அச்சிடுவதை அதிகப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறைக்கப்படுவதால் அது செல்லாமல் போகும் என்ற நிலை இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 2000 ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தப்பட்டது குறித்தான தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக தி பிரிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.