இந்தியா

"இந்தியா ஒருபோதும் போலீஸ் அரசாக மாறக்கூடாது" – உயர்நீதிமன்றம்

"இந்தியா ஒருபோதும் போலீஸ் அரசாக மாறக்கூடாது" – உயர்நீதிமன்றம்

Veeramani

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் ஒரு மாஜிஸ்திரேட்டின் அதிகாரத்தை காவல்துறை துணை ஆணையர்களுக்கு வழங்குவது சட்டவிரோதமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் “ அமைதியை காக்கவும், சட்ட ஒழுங்கை பராமரிக்கவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117 ன் கீழ், சட்டத்தை மீறுபவர்களை சிறையில் அடைக்க காவல்துறை அதிகாரிகளுக்கு மாநில அரசு வழங்கிய அதிகாரங்களுடன் கருத்து வேறுபாடு உள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும்“குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் ஒரு நிறைவேற்று மாஜிஸ்திரேட்டின் செயல்பாடுகளைச் செய்ய மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை துணை ஆணையர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இரண்டு அரசு உத்தரவுகள் சட்டவிரோதமானது, ஏனெனில் அவை நேரடியாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 6 வது பிரிவை மீறுவதாக உள்ளன.

தொடர் குற்றவாளிகளிடமிருந்து நன்னடத்தைக்கான நடத்தையை பேணுவதற்கு, மீறப்பட்டால் சிறைக்கு அனுப்புவதற்கும் அதிகாரம் வழங்கப்படாமல், மாநிலத்தில் சட்ட ஒழுங்கைப் பேணுவது சாத்தியமில்லை என்று காவல்துறை சொல்வதை ஏற்கமுடியாது என்று கூறிய நீதிபதி பிரகாஷ் "சட்டத்தின் ஆட்சியை பலிபீடத்தில் பலியிட முடியாது" என குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பி.என்.பிரகாஷ் “மற்றவர்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் ஒரு அமைதியான மாநிலமாக உள்ளது அதற்கான காரணங்கள், மாநில மக்கள் இயல்பாகவே அமைதியானவர்களாகவும், சட்டத்தை கடைபிடிப்பவர்களாகவும் உள்ளனர். மேலும் ஒரு திறமையான காவல் இயந்திரம் எங்களிடம் உள்ளது, இதனால்தான் தொற்றுநோய்களின் போது கூட சட்டம் ஒழுங்கை திறம்பட கையாள முடிகிறது. திறமையான போலீஸுக்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம். காவல்துறை கூர்மையான நடைமுறைகளை நாடினால், அவர்கள் குடிமக்களிடமிருந்து அந்நியப்படுவார்கள். இப்போது பழ விற்பனையாளர் மற்றும் தெரு வியாபாரிகள் போன்றவர்களளை கிரிமினல் வழக்குகளில் பறிமுதல் சாட்சிகளாக முன்வந்து நிற்க காவல்துறையினர் கட்டாயப்படுத்துகின்றனர். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற பெரும்பாலும் சிறைவாசம் அனுபவிப்பது எளியமக்கள்தானே தவிர வசதிபடைத்த கும்பல்தலைவர்கள் அல்ல ” என்று தெரிவித்தார்