இந்தியா

ஒப்பந்தத்தை மீறிய பாக்., - அமெரிக்காவிடம் இந்தியா புகார்

ஒப்பந்தத்தை மீறிய பாக்., - அமெரிக்காவிடம் இந்தியா புகார்

webteam

பாகிஸ்தான் எப் 16 ரக போர் விமானத்தை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை சேகரித்துள்ள இந்தியா, இவ்விவகாரம் குறித்து அமெரிக்காவிடம் புகார் அளித்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்தியா அடித்துவிரட்டியது. அப்போது இரு நாட்டு போர் விமானங்களுமே பரஸ்பரமாக தாக்கிக்கொண்டன. 

இதில் பாகிஸ்தான் விமானம் தாக்கப்பட்டு விழுந்தது. கிடைத்த விமான பாகங்களை ஆய்வு செய்த இந்திய ராணுவத்தினர், தாக்குதலுக்கு பாகிஸ்தான் ‘எப்16’ விமானத்தையும் AMRAAM ஏவுகணையையும் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் பாகிஸ்தான் இதனை மறுத்து வருகிறது. ஆனால் கைப்பற்றப்பட்ட பாகங்களிலுள்ள வரிசை எண், குறியீடு உள்ளிட்ட சில ஆதாரங்களை வைத்து இது ‘எப்16’ ரக விமானம் என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது.

‘எப்16’ ரக போர் விமானத்தை உள் நாட்டு பயங்கராவதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால் ஒப்பந்த விதிகளை மீறி தற்போது ‘எப்16’ ரக போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை அமெரிக்காவின் கவனத்துக்கு இந்தியா கொண்டு சென்றுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள விமானப்படை அதிகாரி கபூர், பாகிஸ்தான் ‘எப்16’ ரக போர் விமானத்தை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. AMRAAM ஏவுகணையின் பாகங்களும் கிடைத்துள்ளன. இதனை பாகிஸ்தான் மறைக்க முயற்சி செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

AMRAAM ஏவுகணையை இரவு, பகல் மற்றும் எல்லா வானிலையிலும் பயன்படுத்த முடியும். கண்ணுக்கு தெரியாத தூரத்தில் இருந்தாலும் சரியாக சென்று தாக்கும் வல்லமை படைத்த இந்த ஏவுகணையை ‘எப்16’ ரக போர் விமானத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது