இந்தியா - சீனா முகநூல்
இந்தியா

எகிறும் தங்க விலை.. வாங்குவதில் சீனாவை மிஞ்சும் இந்தியா! புள்ளி விவரங்கள் சொல்லும் செய்தி என்ன?

தங்கம் வாங்குவதில், சினாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா என்று உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தங்கம் வாங்குவதில், சினாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா என்று உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தை கண்ட வகையிலேயே இருக்கிறது .. இனி விலையில் இறங்கு முகம் இல்லை என்று தெரிவிக்கிறார்கள் வல்லுநர்கள்.. என்னதான் விலை ஏற்றத்தை சந்தித்தாலும், இருப்பினும், மகளின் திருமணம், சீர்வரிசை என கட்டாயத் தேவைக்கு தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் மக்கள்.

சென்னையில் அக்டோபர் 31 ஆம் தேதி காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் விலை உயர்ந்து 7 ஆயிரத்து 455 ரூபாய்க்கும், ஒரு சவரன் 120 ரூபாய் விலை அதிகரித்து 59 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 7 நாட்களில் சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றது.

இந்தநிலையில். உலக தங்க கவுன்சிலின் படி, தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகளை அதிக கொள்முதல் செய்வதன் மூலம், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியா 51% அதிகமாக தங்கத்தை வாங்கியுள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது.

இந்த காலங்களில் மட்டும் இந்தியாவின் தங்கத்திற்கான தேவை என்பது 18% அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15% - 6% ஆக குறைத்து கடந்த ஜூலை 23 ஆம் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதே காரணம் என்று தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டில் மூன்றாம் காலாண்டில், சீனர்கள் 103 டன் தங்க நாணயங்கள் மற்றும் பார்கள் வாங்கிய நிலையில், இந்தியர்கள் 172 டன் தங்கம் பார், நாணயம் வாங்கியுள்ளனர்.

இது குறித்து, உலக தங்க கவுன்சிலின் பிராந்திய தலைமை நிர்வாக அதிகாரி சச்சின் ஜெயின் கூற்றுப்படி,

“ தங்கம் வாங்கும் நுகர்வோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. செப்டம்பர் மாதம் பாதி வரை, அதிகரித்த வண்ணமே இருந்தது. தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. தங்கத்தில் முதலீடு செய்வதற்கு, அதிகமான பேர் விரும்புகின்றனர் .” என்று தெரிவித்துள்ளார்.