இந்தியா

கட்டியணைத்து காப்பாற்றிய போலீஸ்க்கு கொலை மிரட்டல் ?

உத்தரகாண்டில் முஸ்லீம் இளைஞர் ஒருவரை தாக்குதலில் இருந்து காப்பாற்றிய ககன்தீப் சிங் என்ற சப் இன்ஸ்பெக்டருக்கு தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.உத்தரகாண்ட் மாநிலம் நைநிடாலில் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலுக்கு கடந்த 22 ஆம் தேதி முஸ்லீம் இளைஞர் ஒருவர் பெண் தோழியை சந்திக்க வந்துள்ளார். அப்போது அங்கு திரண்ட சில அமைப்பினர், முஸ்லீம் இளைஞரை சரமாரியாக தா்ககினர். இந்தச் சம்பவத்தை கண்ட அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் ககன்தீப் சிங் அந்த முஸ்லீம் இளைஞரை கட்டியணைத்து தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து காப்பாற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.

சப்-இன்ஸ்பெக்டரின் இந்த நடவடிக்கையை பாராட்டி, இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவும் புகைப்படமும் அதிகளவில் சமூக வளைத்தளத்தில் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில் ககன்தீப் சிங்குக்கு, முஸ்லீம் இளைஞரை தாக்கிய கும்பலிடம் இருந்து மிரட்டல் வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதனை ககன்தீப் சிங் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியது "எனக்கு கொலை மிரட்டல் ஏதும் வரவில்லை. எனக்கே இது குறித்து நண்பர்கள் கூறிய பின்புதான் தெரியும். நான் இப்போது என் விடுமுறையை சந்தோஷமாக அனுபவித்து வருகிறேன். எனக்கு கொலை மிரட்டல் வந்ததா என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை" என தெரிவித்துள்ளார்