கொரோனா வைரஸ் தடுப்புக்காக அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியதும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்த இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கொரோனாவையும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கட்டுப்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்தன.
இந்நிலையில் அமெரிக்காவில் மிகத் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தைத் தராவிட்டால் அதற்குரிய பதிலடியை இந்தியா சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டும் வகையில் பேசியிருந்தார். இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் பாரசிட்டமால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளுக்கு மத்திய அரசு மருந்தை அனுப்ப உள்ளது. மேலும் மருந்து ஏற்றுமதி விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.