இந்தியா

ஐ.நா. மனித வளர்ச்சி குறியீடு: இந்தியா முன்னேற்றம்!

ஐ.நா. மனித வளர்ச்சி குறியீடு: இந்தியா முன்னேற்றம்!

webteam

ஐ.நா. மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா கடந்த ஆண்டை விட ஒரு இடம் முன்னேறி 129-ஆவது இடம் பிடித்துள்ளது.

‌ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் தெற்காசிய அமைப்பு இணைந்து, உலக அளவில் மனித வளர்ச்சி குறியீடு தொடர்பான கணக்கீடு நடத்தியது. இந்த மதிப்பீடு 3 வெவ்வேறு கோணங்களில் மதிப்பிடப்படுகிறது. நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வு, அனைத்தையும் அணுகும் அறிவுமுறை மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கீடு நடத்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டிற்கான மனித வளர்ச்சி குறியீடு பட்டியலில் மொத்தமுள்ள 189 நாடுகளில், இந்தியா தற்போது 129ஆவது இடம் பிடித்துள்ளது. 

இந்தியா முந்தைய ஆண்டைவிட தற்போது ஒரு இடம் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தப் பட்டியலில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்திலும், அயர்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் அண்டை நா‌டான இலங்கை 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு, 71ஆவது இடம் பிடித்துள்ளது. பூட்டான் 134ஆவது இடத்திலும், வங்கதேசம் 135ஆவது இடத்திலும், நேபாள் 147ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 152ஆவது இடத்திலும் உள்ளன. 

பாகிஸ்தான் சென்ற ஆண்டைவிட 2 இடங்கள் பின்தங்கியுள்ளது. இருந்தபோதிலும் உலக அளவில் தெற்காசிய நாடுகள் மனித வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலின பாகுபாடு உலக அளவில் தொடர்வதாகவும், இந்தப் பட்டியலில் இந்தியா 122ஆவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.