முகமது முய்சு, மோடி எக்ஸ் தளம்
இந்தியா

மாலத்தீவுக்கு மீண்டும் கைகொடுத்த இந்தியா.. பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிந்த பெரிய ஒப்பந்தம்!

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.

Prakash J

கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி முகம்மது முய்சு பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. காரணம், அவர் சீனா ஆதரவாளராக அறியப்படுகிறார்.

இத்துடன் மாலத்தீவு தேர்தல் பிரசாரத்தின்போது, ​​அவர் அடிக்கடி இந்தியாவை விமர்சித்தும் வந்தார் அவர். மேலும் இந்திய ராணுவ வீரர்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். அதன்பேரில் கடந்த மே மாதத்துடன் இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் வெளியேறி இருந்தனர். இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் அதிபர் முகம்மது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC) கட்சி, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.

எனினும், அந்நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அதற்குக் காரணம், அந்த நாட்டிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததுதான். அந்த நாட்டுக்கு அதிகம் சுற்றுலா செல்லும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் இருந்தனர். ஆனால், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தைக் குறிப்பிட்டு மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்தது. இதன் காரணமாக, இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதைக் குறைத்துக் கொண்டனர். மாலத்தீவு, அதன் சுற்றுலா வருமானத்தையே நம்பியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜம்மு காஷ்மீர் | வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே 5 MLA... ஆட்சியமைக்க பாஜக போடும் பக்கா ப்ளான்!

இந்த நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜூன் மாதம் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர் கலந்துகொண்டாலும் இதுவே அவரது முதல் அரசு பயணமாகும். இதனால் டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார்.

பின்னர், பிரதமர் மோடியும் முகமது முய்சுவும் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகள் இடையேயான பரஸ்பர நலன், மேம்பாடு, உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். அதன்பிறகு, 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி, மாலத்தீவு அதிபர் முய்சு ஆகியோர் கையெழுத்திட்டனர். இது இரு நாட்டு உறவை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாலத்தீவின் அந்நியச் செலாவணி பிரச்னைகளைச் சமாளிப்பதில் பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இரு நாட்டு உறவில் முக்கிய திருப்பமாக இந்தியாவின் ரூபே கார்டுகள் இப்போது மாலத்தீவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது மாலத்தீவு செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியர்கள் வருகை மாலத்தீவில் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், அது இனிமேல் அதிகரிக்கும் எனவும், அவர்களுக்கு இந்த கார்டுகள் மிகவும் உதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: “மலப்புரம் தங்கம் கடத்தல்: பெரும்பாலானோர் முஸ்லிம்கள்”- கேரள எம்.எல்.ஏ.வின் சர்ச்சை பேச்சு!