இந்தியா

இந்தியாவின் பயணத்தை தடுக்க நினைப்பவர்கள் தூக்கியெறியப்படுவார்கள் - மோகன் பாகவத் எச்சரிக்கை

இந்தியாவின் பயணத்தை தடுக்க நினைப்பவர்கள் தூக்கியெறியப்படுவார்கள் - மோகன் பாகவத் எச்சரிக்கை

ஜா. ஜாக்சன் சிங்

"தனது வளர்ச்சியை நோக்கிய பயணத்தை இந்தியா தொடங்கிவிட்டது; இந்த அதிவேக பயணத்துக்கு குறுக்கில் வருபவர்கள் தூக்கியெறியபப்படுவார்கள்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் ஹிரிதுவாரில் இந்து மதத் துறவிகளின் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மோகன் பாகவத் பேசியதாவது:

சுவாமி விவேகானந்தரும், மகரிஷி அரவிந்தரும் கனவு கண்ட இந்தியாவை வெகு சீக்கிரத்தில் நாம் காண இருக்கிறோம். சிலர் அந்த இந்தியாவை காண்பதற்கு 20 முதல் 25 ஆண்டுகள் வரை ஆகும் எனக் கூறுகிறார்கள். ஆனால், எனது அனுபவத்தில் இருந்து நான் கூறுகிறேன். 8 அல்லது 10 ஆண்டுகளுக்குள்ளாக அந்த இந்தியாவை நாம் பார்த்து விடுவோம். ஆனால் அதற்கு நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியது மிகவும் அவசியம். மக்கள் மனது வைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

மக்களுக்கு நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நாம் அடைய நினைக்கும் இலக்கு உன்னதமானது. நமது நோக்கம் தூய்மையானது. அப்படியிருக்கையில் யாருக்காகவும், எதற்காகவும் நாம் பயப்பட தேவையில்லை. இந்த நேரத்தில், சுவாமி விவேகானந்தர் கூறியதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். இந்து மதம் வளர்ச்சி அடையாவிட்டால், இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமற்றது என அவர் தீர்க்கமாக கூறுகிறார். எனவே, இதை மனதில் இருத்தி நாம் செயல்பட வேண்டும். நமது இலக்கு இந்து ராஷ்டிரம். இந்து ராஷ்டிரம் என்பது என்ன? சனாதன தர்மம் தான் இந்து ராஷ்டிரம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இந்தியா தனது வளர்ச்சியை நோக்கி அதிவேகமாக பயணிக்க தொடங்கிவிட்டது. இந்தியா பயணம் செய்யும் வாகனத்தில் வேகத்தை கூட்டும் கருவி (ஆக்சிலேட்டர்) மட்டுமே இருக்கிறது. நிறுத்துவதற்கான கருவி (பிரேக்) கிடையாது. அதனால் யாரும் குறுக்கே வந்து விடாதீர்கள். உங்களுக்கு தேவையென்றால், எங்களுடன் சேர்ந்து நீங்கள் பயணிக்கலாம். ஆனால் இந்தப் பயணத்தை தடுத்து நிறுத்த நினைக்க வேண்டாம். அப்படி செய்தால், ஒன்று, அவர்கள் தூக்கியெறியப்படுவார்கள். இல்லையெனில் அவர்களின் கதை முடிந்துவிடும். இந்தியா எப்போதும் அகிம்சையை விரும்பும் நாடு தான். யார் மீது விரோதமும், வெறுப்பும் நமக்கு கிடையாது. நாம் அகிம்சை பாதையில் செல்வோம். அதே சமயத்தில், பெரிய தடியையும் கையில் வைத்திருப்போம். ஏனெனில் அதிகாரத்துக்கு தான் இந்த உலகம் செவிசாய்க்கும். ஆகவே, அந்த அதிகாரம் கையில் தெரியும்படி இருக்க வேண்டும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.