இந்தியா

ஆசியாவிலேயே லஞ்சம் ஊழலில் இந்தியாவுக்கு முதலிடம்: ஃபோர்ப்ஸ்

Rasus

சமீபத்திய கருத்துகணிப்பில் ஆசிய அளவில் லஞ்சம் - ஊழல் மிகுந்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக பிரபல ஃபோர்ப்ஸ் இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்பிரன்ஸி இண்டர்நெஷனல் என்ற அமைப்பு சார்பாக 16 ஆசிய பசிபிக் நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி அதிக ஊழல் - லஞ்சம் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 10ல் 7 பேர் அரசு அலுவலகங்களில் தங்களின் பணிகள் முடிய லஞ்சம் வழங்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிரான்ஸ்பிரன்ஸி இண்டர்நெஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை சமீபகாலமாக லஞ்சம் பெருமளவு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக காவல்துறையில் லஞ்சம், முறைகேடுகள் தலைவிரித்தாடுவதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கை மீறுவதற்காக அதிகளவு லஞ்சம் வழங்கப்படுவதாகவும், சீனாவிலும் அரசு இயந்திரத்தை சட்டத்திற்கு விரோதமாக நகர்த்த லஞ்சம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கல்வி, மருத்துவம், சட்டம் ஒழுங்கு என்று அனைத்து முக்கியத்துறைகளிலும் லஞ்சம் அளிக்காமல் எந்த காரியமும் நடைபெறுவதில்லை எனவும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லஞ்சத்தால் அரசின் உதவிகள் கிடைக்க வேண்டிய ஏழை எளிய மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஊழல் - லஞ்சமற்ற சமுதாயம் உருவாக்கப்படும் என்ற உறுதியுடன் ஆட்சிக்கு வந்தவர்களும் அந்த வாக்குறுதிகளை பதவியில் அமர்ந்தவுடன் மறந்துவிடுவதே இந்தியாவின் இந்நிலைக்கு காரணம் எனவும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் லஞ்சத்தை ஊக்கவிக்காத நாடாக ஜப்பான் அறிவிக்கப்பட்டுள்ளது.