இந்தியா

அக்னி - 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

JustinDurai
அணுகுண்டுகளை சுமந்துகொண்டு 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து எதிரிகளை துவம்சம் செய்யும் அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
ஒடிஷா மாநிலம் அருகே அப்துல் கலாம் தீவில் நடைபெற்ற இப்பரிசோதனையில் அக்னி ஏவுகணை நிர்ணயித்தபடி இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சகம் அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது என்றும் அதே நேரம் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை மீது 3ஆவது முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் முழு வெற்றி கிடைத்துள்ளதை அடுத்து அந்த ஏவுகணை இந்திய ராணுவத்தில் இணைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முந்தைய அக்னி ஏவுகணைகள் அனைத்தும் 700 கிலோ மீட்டர் முதல் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் வரையே பாயும் திறன் கொண்டவையாகும். சீனாவுடன் எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதும் முக்கியத்துவம் பெறுகிறது. சீனா 12 ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 15 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பாய்ந்து தாக்கும் டாங்ஃபெங் - 41 ஏவுகணைகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.