இந்தியா

இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் - நிதி ஆயோக் அறிக்கை

இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் - நிதி ஆயோக் அறிக்கை

webteam

இந்தியா கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் நீர் மேலாண்மை குறித்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அதை வெளியிட்டார். தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறை நீடித்தால் வரும் 2030ஆம் ஆண்டில் தண்ணீர் தேவை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. அப்போது 40 சதவிகித மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இப்போது சுமார் 60 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பிரச்னையை சந்தித்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் சென்னை, டெல்லி, பெங்களூரூ, ஐதராபாத் உள்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூய்மையான குடிநீர் கிடைக்காமல் ஆண்டு தோறும் 2 லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழந்து வருவதாக நீர் மேலாண்மை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 52 சதவிகித விவசாய சாகுபடி மழைநீரை நம்பியே இருப்பதாகவும் எனவே தண்ணீர் சிக்கனம், நீர் சேமிப்பு ஆகியவை ‌அவசியம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.