2023-2024 india tax increase web
இந்தியா

இந்தியாவின் நேரடி வரிவசூல் 19.60 லட்சம் கோடி.. 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரிப்பு!

இந்தியாவின் நேரடி வரி வசூல் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த நிதியாண்டில் 182 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

PT WEB

2023-24ஆம் நிதியாண்டில் 19 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளில் இல்லாத அதிகளவு என வருமானவரித் துறை கூறியுள்ளது.

இதில், கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி வசூல் இருமடங்காக உயர்ந்து 9 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் தனிநபர் வருமான வரி வசூல் 4 மடங்கு உயர்ந்து 10 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசு பொறுப்பேற்ற 2014-15ஆம் நிதியாண்டில் மொத்த நேரடி வரிவசூல் 6 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கார்ப்பரேட் நிறுவனங்களில் வரிவசூல் 4 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாயாகவும், தனிநபர் வரிவசூல் 2 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாயாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்ந்த வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை..

2014-15ஆம் நிதியாண்டில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 4 ஆயிரமாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் அது 8 கோடியே 61 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, 2014-15ஆம் நிதியாண்டில் 5 கோடியே 70 லட்சம் பேராக இருந்த வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டில் 10 கோடியே 41 லட்சமாக உயர்ந்திருப்பதாகவும் வருமானவரித் துறை கூறியுள்ளது.