இந்தியா

இந்தியாவில் கொரோனா 4-வது அலையா? மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பதில்

இந்தியாவில் கொரோனா 4-வது அலையா? மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பதில்

ஜா. ஜாக்சன் சிங்

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தற்போது சற்றே அதிகரித்து வரும் நிலையில், இது பெருந்தொற்றின் 4-வது அலையா என்ற கேள்விக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பதிலளித்துள்ளது.

கொரோனா மூன்றாவது அலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்ந்த நிலையில், சில வாரங்களாக டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் விரைவில் கொரோனா 4-வது அலை பரவக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கூடுதல் இயக்குநர் சமீரன் பாண்டா, "தற்போதைய புள்ளிவிவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, நாடெங்கும் 4ஆவது அலை தொடங்கிவிட்டது என கூற முடியாது. வைரஸ் பரவல் நாடு முழுக்க ஒரே சீராக இல்லை. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது புதிய திரிபுடன் கூடிய கொரோனா வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை" என்றார்.