இந்தியா

ரூ.245 மதிப்புள்ள ரேபிட் கிட்டை ரூ.600-க்கு வாங்கியதா அரசுகள்? : வெளியான தகவல்..!

webteam

சீனாவிடம் இருந்து ரூ.245க்கு ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகளை இறக்குமதியாளர்கள் வாங்கிய நிலையில், மத்திய, மாநில அரசுகள் அதனை ரூ.600க்கு வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை அடுத்து, அதிகப்படியான மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் கொரோனா அறிகுறிகளை விரைந்து கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை கருவிகளை சீனாவிடம் வாங்கும் முடிவுக்கு இந்தியா வந்தது. அதன்படி கடந்த மார்ச் 27ஆம் தேதி சீனாவிடம் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் ஆர்டர் செய்யப்பட்டது.

இதையடுத்து ஏப்ரல் 16-ஆம் தேதி ரேபிட் கிட்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ரேபிட் டெஸ்ட் மற்றும் ஆர்.என்.ஏ பரிசோதனை கருவிகள் என மொத்தம் 6,50,000 பரிசோதனை கருவிகள் இந்தியா வந்தடைந்தன. இந்த கருவிகளை சீனாவிடம் இருந்து வாங்கி ரியல் மெடபாலிக்ஸ் மற்றும் ஆர்க் பார்மாசியுடிகல்ஸ் என்ற நிறுவனம் விநியோகித்தது. இந்நிலையில் ரேபிட் டெஸ்ட் கிட்கள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு அதிக விலைக்கு அரசுகளிடம் விற்கப்பட்டிருப்பதாக என்.டி.டிவி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி ரூ.245க்கு வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்டை மத்திய அரசிடம் இந்நிறுவனம் ரூ.600க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தமிழக அரசும் இதே ரேபிட் கிட்டை ரூ.600க்கு ஷான் பையோடெக் என்ற நிறுவனத்திடம் ஆர்டர் செய்து வாங்கியதாக தெரிகிறது. மொத்தம் 50,000 ரேபிட் கிட்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ரியல் மெடபாலிக்ஸ் நிறுவனம் ஷான் பையோடெக் நிறுவனம் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் தாங்கள் அனுமதி பெற்று இடைத்தரராக இருந்து அரசுகளுக்கு விநியோகித்த ரேபிட் டெஸ்ட் கிட்டை ஷான் பையோடெக் நிறுவனம் தமிழகத்திற்கு விதிமுறையை மீறி விற்றிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்த போது ரேபிட் கிட்களை 60% அதிக விலைக்கு விற்றதை எண்ணி வருத்தம் தெரிவித்தது. அத்துடன் அதிக விலைக்கு ரேபிட் கிட்கள் விற்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு, அனைத்து வரிகளையும் சேர்த்து அதனை ரூ.400க்கு விற்க வேண்டும் என விலையை குறைத்தது. இந்திய பொருளாதாரதம் சரிந்துள்ள நிலையில், அதிகப்படியான மக்களுக்கு பரிசோதனை செய்வதற்காக குறைந்த விலையில் சோதனைக்கருவிகள் தேவைப்படும் நேரத்தில் அரசுகள் ஏஜென்சிகளின் விலை நிர்ணயத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும் என தெரிவித்தது.