இந்தியா

குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை ரத்து செய்யுங்கள்: இந்தியா கோரிக்கை

குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை ரத்து செய்யுங்கள்: இந்தியா கோரிக்கை

webteam

பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய வேண்டுமென சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

உளவு பார்த்ததாகக் கூறி பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட குல்பூஷண் ஜாதவ் தொடர்பான வழக்கு விசாரணை, சர்வதேச நீதிமன்றத்தில் தொடங்கியது. நெதர்லாந்தின் THE HAGUE நகரில் நடக்கும் இவ்விசாரணையில் இந்தியா சார்பில் வாதாடிய முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, குல்பூஷண் மீதான விசாரணையில் வியன்னா நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்டினார். 

சிறையில் இருக்கும் குல்பூஷணை தூதரகம் மூலம் தொடர்பு கொள்ள இந்தியா 13 முறை அனுமதி கேட்டும் அத்தனை முறையும் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும் இது மிகப்பெரிய விதிமீறல் என்றும் சால்வே குறிப்பிட்டார். இதனால் தற்போது குல்பூஷண் எந்த நிலையில் உள்ளார் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார். 

ஓய்வுப் பெற்ற இந்தியக் கடற்படை அதிகாரி குல்பூ‌ஷண் சிங் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாகக் கூறி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால், வியாபாரத்திற்காக ஈரான் சென்றவரை பாகிஸ்தான் கைது செய்துவிட்டதாகக் கூறி சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், குல்பூஷணுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு 2017ம் ஆண்டு இடைக்காலத் தடை விதித்தது.