இந்தியா

ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இதுவரை எந்தெந்த நாடுகள் அனுமதி? சிறப்பம்சங்கள் என்ன?

ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இதுவரை எந்தெந்த நாடுகள் அனுமதி? சிறப்பம்சங்கள் என்ன?

Veeramani

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இதுவரை எந்தெந்த நாடுகள் அனுமதி அளித்துள்ளன? இந்தியாவில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற விவரங்களை காணலாம்.

உலகிலேயே முதன்முதலில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ரஷ்யாவில் இந்த தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் இரண்டு டோஸ்கள் கொண்டது. வலுவிழந்த வைரஸை உடலுக்குள் செலுத்தி அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தொழில்நுட்பம்தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் கோவிஷீல்டு,கோவாக்சின் தடுப்பூசிகளுக்கும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் இடையே இருக்கும் பெரிய வித்தியாசம் என்னவென்றால் இதில் முதல் டோஸில் ஒரு வைரஸும், இரண்டாவது டோஸில் வேறொரு வைரஸும் செலுத்தப்படுகிறது. இதனால் நீடித்த நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கிறது. 21 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும். ரஷ்யா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் என 55 நாடுகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

இந்த தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸில் பராமரிக்கலாம். அதாவது வழக்கமாக பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டியே போதும். இந்தியாவை பொறுத்தவரை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ஏற்கனவே ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பரிசோதனை செய்து இதன் செயல்திறன் 91.6 சதவிகிதமாக இருக்கிறது எனக் கூறியுள்ளது. முதல்கட்டமாக டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்து மத்திய அரசுக்கு வழங்கும். இதற்கு 2 முதல் 3 வார காலம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர ஏற்கனவே 5 மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி ஆண்டுக்கு 85.2 கோடி டோஸ்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும். இதில் 50 விழுக்காடு அதாவது 42.6 கோடி டோஸ்கள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்.

முதல்கட்டமாக 10 கோடி டோஸ்களை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் இந்தியாவிற்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசி உற்பத்தியை தொடங்க 3 மாதங்கள் தேவைப்படும். ஸ்புட்னிக் வி தடுப்பூசி முழுவீச்சில் பயன்பாட்டுக்கு வரும் போது தடுப்பூசிகளின் விலை குறைய வாய்ப்புள்ளது. கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கும் வேளையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசுகள் புகார் கூறி வரும் நிலையில் அதனை போக்க ஸ்புட்னிக் வி தடுப்பூசி உதவும்.