model image x page
இந்தியா

”நாடாளுமன்றத்திலேயே காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மவுன அஞ்சலியா?” - கனடாவுக்கு இந்திய அரசு கடும் கண்டனம்

Prakash J

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் ஓராண்டு நினைவு நாளையொட்டி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு நிமிஷம் மெளன அஞ்சலி அனுசரிக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

’இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும்’ என காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புப் போராடி வருகிறது. கனடாவில் இருந்துகொண்டு, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் சுட்டுக் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கும் தொடர்பு உண்டு என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கொளுத்திப் போட்ட விவகாரத்தில் இருநாடுகளுக்குள் விரிசல் ஏற்பட்டது.

இதையும் படிக்க: ஆந்திரா| அன்று வீடு..இன்று அலுவலகம்; ஜெகன் கட்டடம் இடிப்பு..பழிக்குப்பழி வாங்கும் சந்திரபாபு நாயுடு!

இதன்காரணமாக, இரு தரப்பும் தூதர்கள் வெளியேற்றம் தொடங்கி பல்வேறு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அதேநேரத்தில் ட்ருடோவின் கருத்துக்கும் இந்தியா மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்கு கனடா இடம் கொடுப்பதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய பிரச்னை என்று இந்தியா கூறிவருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில், 4 இந்திய இளைஞா்களைக் கனடா காவல்துறையினா் கடந்த மாதம் கைது செய்தனர். இந்த நிலையில், ஜி7 மாநாட்டுக்கிடையே பிரதமா் நரேந்திர மோடியுடன் நடந்த கலந்துரையாடலுக்குப் பிறகு, இந்தியாவுடன் பல பிரச்னைகளில் ஒருமித்த பாா்வை எட்டியுள்ளதால் அந்நாட்டின் புதிய அரசுடன் பொருளாதாரம் மற்றும் தேசப் பாதுகாப்பை மையப்படுத்திய நல்லுறவுக்கான வாய்ப்புகள் இருப்பதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நம்பிக்கை தெரிவித்திருந்தாா்.

இதையும் படிக்க; ஹிஜாப் அணிய தடை.. மீறினால் அபராதம்.. தஜிகிஸ்தான் அரசு அதிரடி!

இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் ஓராண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, கடந்த ஜூன் 18ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதற்காக, கனடா நாடாளுமன்றத்தில் நிஜ்ஜாரின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ”வன்முறையை ஆதரிக்கும் பயங்கரவாதத்துக்கு அரசியல் இடமளிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் இந்தியா எதிா்க்கும்” எனத் தெரிவித்தார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம், கனடாவின் இந்தச் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டிற்கான இந்திய தூதரகம், 1985இல், ஏர் இந்தியா விமானத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்த 329 பேர் நினைவாக மவுன அஞ்சலி கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: FactCheck|முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்? வைரலாகும் புகைப்படங்கள்.. உண்மை என்ன?

இதுகுறித்து வான்கூவரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைத்து நாடுகளுடன் நெருக்க மாக இந்தியா பணியாற்றி வருகிறது’ எனத் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 1985-ஆம் ஆண்டில் ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததன் 39-வது ஆண்டு நினைவு நாள் ஜூன் 23-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்தியா

இந்த விபத்தில், 86 குழந்தைகள் உட்பட 329 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவில் விமான வரலாற்றில், கொடூரமான தீவிரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது. உயிரிழந்தவர்கள் நினைவாக ஸ்டான்லி பூங்காவில் உள்ள செபர்லே விளையாட்டு திடலில் ஏர் இந்தியா நினைவிடத்தில் 23-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு மவுன அஞ்சலி கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்திய வம்சாவளியினர் இந்த நிகழ்ச்சியில் கூட்டாக இணைந்து கலந்துகொள்வதன் வழியாக தீவிரவாதத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் மீண்டும் இரு நாடுகளுக்குள் விரிசல் விழ ஆரம்பித்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிக்க: காலில் விழச் சொன்னாரா தவெக கட்சி நபர்? - பரவிய தகவலுக்கு விஜய் தோளில் சாய்ந்து அழுத பெண் விளக்கம்!