2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ’I-N-D-I-A’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. ஏற்கெனவே இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் நடைபெற்ற நிலையில், மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதற்குப் பின் போபாலில் நடைபெறவிருந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே 5 (மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா) மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இக்கூட்டணியின் 4வது கூட்டம் இன்று (டிச.19) டெல்லியில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணியில் அங்கம் வகிக்கும் 28 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சமீபத்தில் தொகுதிப் பங்கீடு, பாஜகவுக்கு எதிரான தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து இக்கூட்டத்தில், எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
’விவி பேட் என்னும் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தின்மூலம் ஒரு வாக்காளர் எந்த சின்னத்திற்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இந்த ஒப்புகைச் சீட்டுகள் இயந்திரத்தின் உள்ளே சேமிக்கப்படும். ஆனால், அதுபோன்று இல்லாமல் அந்த ஒப்புகைச் சீட்டுகள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் அதனைச் சரிபார்த்த பின்னர், அதற்கென்று இருக்கும் தனியான ஒரு வாக்குப்பெட்டியில் செலுத்தும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.