India alliance pt desk
இந்தியா

மக்களவைத் தேர்தல் நிறைவடையும் நாளன்று கூடும் I.N.D.I.A. கூட்டணித் தலைவர்கள்; காரணம் என்ன?

PT WEB

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆறாவது கட்ட வாக்குப்பதிவு, கடந்த 25 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.

8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய வியூகங்களை வகுப்பதில் அரசியல் கட்சித் தலைவர்கள் இறங்கி உள்ளனர். அதன்படி, எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணித் தலைவர்கள், வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே

ஜூன் 1ஆம் தேதி மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்தபின், டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய வியூகங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செயல்திறன் ஆகியவை குறித்து, அந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் பிணையில் வெளியே வந்துள்ள கெஜ்ரிவால், வரும் ஜூன் 2ஆம் தேதி திகார் சிறையில் சரணடையவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் சரணடைவதற்கு முந்தைய நாளில் நடைபெறும் I.N.D.I.A. கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், கெஜ்ரிவால் கலந்துகொள்ள இருப்பதால், அந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.