2030ஆம் ஆண்டுக்குள் 6ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு ஏற்கனவே 6ஜி க்கு வேலை செய்யத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் 6ஜி நெட்வொர்க் இந்தியாவிற்கு வரும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
2030ல் இந்தியாவில் 6ஜி நெட்வொர்க் அறிமுகம்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 6ஜி நெட்வொர்க்கை வெளியிடுவதற்கான பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கூறினார். “5ஜி மற்றும் 6ஜி நெட்வொர்க்குகளின் வெளியீடு மக்களுக்கு வேகமான இணைய வேகத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அதிக வேலைகளை உருவாக்கவும், பொருளாதார முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கவும் உதவியுள்ளது.
3ஜி இலிருந்து 4ஜி க்கு இந்தியா எவ்வாறு விரைவாக முன்னேறியது என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது, நாம் 5ஜி அறிமுகத்தை நெருங்கி வருவதால், நாடு 6ஜி ஐ இலக்காகக் கொண்டுள்ளது. விவசாயம், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அதிக வளர்ச்சியை வழங்க 5ஜி உதவும் என்பதால் சமீபத்திய நெட்வொர்க்கை நவீனமயமாக்க வேண்டும். எனவே, 5ஜி நெட்வொர்க்கை விரைவில் அறிமுகப்படுத்துவது முக்கியம்.” என்று பேசினார் பிரதமர் மோடி.
இந்தியாவில் 5ஜி எப்போது அறிமுகம்?
“வரும் மாதங்களில் 5ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். 5ஜி சோதனை திட்டம் டிசம்பர் 31, 2021க்குள் முடிக்கப்பட்டது, இனி 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் ஜூன் தொடக்கத்தில் நடைபெறும். இது முடிந்ததும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் இந்தியாவில் 5ஜி வெளியீட்டை எதிர்பார்க்கலாம். 5ஜி அறிமுகம் மூலம் இந்தியப் பொருளாதாரத்திற்கு 450 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.3,492 கோடி) வழங்க முடியும்” என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்தியாவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட 13 முக்கிய நகரங்களில் மட்டுமே முதலில் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும். கொல்கத்தா, டெல்லி, குருகிராம், சென்னை, பெங்களூரு, புனே, சண்டிகர், ஜாம்நகர், அகமதாபாத், ஹைதராபாத், லக்னோ மற்றும் காந்தி நகர் ஆகியவை இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.