78வது சுதந்திர தின விழா Facebook
இந்தியா

”140 கோடி மக்கள் இணைந்து இந்தியாவை வல்லரசாக்க வேண்டும்”- செங்கோட்டையில் பிரதமர் மோடி உரை!

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையை ஆற்றினார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையை ஆற்றினார்.

78வது சுதந்திர தின விழா

செங்கோட்டைக்கு வந்த பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பிரதமர் மோடி, 7.30 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் செங்கோட்டையில் மலர்கள் தூவப்பட்டன.

இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது உரையை நிகழ்த்தினார். அதில், ”2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதமாக இந்தியா மாறும். நாட்டுக்காக இன்னுயிர் நீத்தவர்களை தலை வணங்குகிறேன். உத்வேகமாக செயல்பட்டால் 2047-இல் வளர்ச்சியடைந்த பாரதமாக நாம் உருவாக முடியும்.

வயநாடு உள்ளிட்ட பேரிடர் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் வருத்தமளிக்கின்றன. நமது விவசாயிகள் மற்றும் வீரர்கள் நாட்டிற்காக கடுமையாக பாடுபடுகின்றனர்.140 கோடி மக்கள் இணைந்து இந்தியாவை வல்லரசாக்க வேண்டும். 40 கோடி இந்தியர்கள் இணைந்து பிரிட்டிஷாரை வெளியேற்றினார்கள்.

நாட்டு மக்கள் அகண்ட பாரதத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.உற்பத்தி மையமாக இந்தியா மாற வேண்டும். உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பயன் பெற்றுள்ளனர்.

சாலையோர வியாபாரிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட திட்டங்களால் பொருளாதாரம் பலம் பெறுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து நீதி வழங்குவதற்காகவே புதிய குற்றவியல் சட்டங்கள். விண்வெளித்துறையில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா காலத்துக்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்தில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. பல்வேறு துறைகளில் நாம் வளர்ச்சி கண்டுள்ள நிலையில் இதை பொற்காலமாக பார்க்கிறோம். நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகளில் புதிதாக 75,000 இடங்கள் உருவாக்கப்படும்.

சுற்றுலா, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளும் நவீனமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. நமது மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதை தடுக்கும் வகையில் உள்நாட்டிலேயே மருத்துவம் படிக்க கூடுதல் மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும். மேலும், மகளிர் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்தியாவின் ராணுவ வலிமை, கலாசாரம், தொழில்நுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் அணிவகுப்பு நடைபெற்றன.

வேளாண் துறை, இளைஞர் நலன், பெண்கள் மற்றும் மகளிர் மேம்பாடு என பல்வேறு பிரிவிகளின் கீழ், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு, சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.மேலும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளும் சுதந்திர தின விழாவில் பங்கேற்றிருந்தனர்.

சுதந்திர தின விழாவையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 700 செயற்கைக் நுண்ணறிவு கேமராக்கள் செங்கோட்டை பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. டெல்லி முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.