இந்தியா

சபரிமலையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்

சபரிமலையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்

Veeramani

கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடை பந்தலில் கூடும் ஐயப்ப பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் "வெர்ச்சுவல் க்யூ" முலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்  "வெர்ச்சுவல் க்யூ" மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ஆயிரமாக வியாழக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு நிலக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு "ஸ்பாட் புக்கிங்" மையம் மூலம் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் சபரிமலையின் தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இன்று அதிகாலை 3 மணிக்கு பள்ளி உணர்தலோடு  4 மணிக்கு நடை திறக்கப்பட்டது முதல் தற்போது வரை பக்தர்கள் கூட்டம் சன்னிதானத்தில் அலைமோதுகிறது. 18ம் படியேறி நடை பந்தலில் குழுமியிருக்கும் பக்தர்கள் தொடர்ச்சியாக தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் நடை பந்தலிலே பலமணிநேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. தரிசனம் முடித்த பக்தர்கள் அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதம் வாங்குவதற்காக  சன்னிதானத்தில் உள்ள பிரசாத மண்டபத்தில் கூடுவதால் அங்கேயும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

டிசம்பர் 26ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். பிறகு டிசம்பர்  30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2022ம் ஆண்டு 2022 ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும். 2022ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கிறது.

பக்தர்களின் வருகை அதிகரிப்பிற்கு ஏற்ப அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர்,  மருத்துவம்,  போக்குவரத்து,  உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிகரிக்கும் பக்தர்களுக்குத் தேவையான அரவணை, அப்பம் உள்ளிட்ட சபரிமலை பிரசாதங்கள் தயாரிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.