நாடு முழுவதும் கடந்த 2021 ஆம் ஆண்டில் தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலைகள் அதிகரித்ததாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 42 ஆயிரத்து 4 தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்ததால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதே போல், சுயதொழில் முனைவோரின் தற்கொலை எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் மட்டும் 16.73 விழுக்காடு அளவுக்கு தற்கொலைகள் அதிகரித்ததாக பதிவாகியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட கொரோனாவால் ஏராளமான தொழிலாளர்கள் வேலையை இழந்ததே தற்கொலைக்கான காரணங்களில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. கட்டாய கடன், வருமானம் இழப்பு, சமாளிக்க முடியாத செலவுகள் ஆகியவையும் தற்கொலைக்கான காரணங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும், 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் முறையான சம்பளம் பெற்று வந்த தொழிலாளர்களில் 30 விழுக்காட்டினர் முறைசாரா தொழிலாளர்களாகவும், 10 விழுக்காட்டினர் தினசரி கூலிகளாகவும் மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு சாதாரண மக்களின் வாழ்க்கையை கொரோனா தொற்று காலம் புரட்டி போட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.