பிரதமர் அலுவலகம், பிரதமர் மோடி pt web
இந்தியா

சிறுபான்மையினர் மக்கள் தொகை குறித்து திடீர் அறிக்கை; ஆய்வு குழுவில் ஆளுநர் ஆர்.என் ரவியின் மகள்!

PT WEB

ஜனத்தொகையில் சிறும்பான்மையினர் பங்கு

செய்தியாளர் கணபதி சுப்ரமணியம்

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மதரீதியான சர்ச்சைகள் தேசிய அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று அரசியல் ரீதியாக சலசலப்பை உண்டாக்கியுள்ளது. பல்வேறு நாடுகளின் ஜனத்தொகையில் சிறுபான்மையினர் பங்கு என்ன என்பதை ஆய்வு செய்யும் சர்ச்சைக்குரிய அறிக்கையை வரைந்துள்ள குழுவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் மகள் ஷமிகா ரவி முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி

1950 முதல் 2015 வரையிலான காலத்தில் இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களின் சதவிகிதம் என்ன என்பதை இந்த அறிக்கை ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வின்படி, இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் இஸ்லாமியரின் பங்கு 43 சதவிகிதம் அதிகரித்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்துக்களின் பங்கு 7.81 சதவீதம் குறைந்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல பல்வேறு நாடுகளின் ஜனத்தொகையில் சிறுபான்மையினரின் பங்கு எந்த அளவுக்கு மாற்றம் கண்டு இருக்கிறது என்பதை அறிக்கை ஆய்வு செய்துள்ளது.

பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு அளித்துள்ள தரவுகள்படி, இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் இஸ்லாமியரின் பங்கு 14 சதவிகிதமாக உள்ளது. அதேபோல் இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் பங்கு 2.36 சதவீதமாக உள்ளது. அதாவது 1950 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் பங்கு 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிறரது சொத்துக்களை இஸ்லாமியருக்கு பங்கிட்டு அளித்து விடும் என பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்துள்ளது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அப்படி சொல்லப்படவில்லை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் விளக்கம் அளித்து வருகிறார்கள். இத்தகைய பரபரப்பான சூழலில், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு இஸ்லாமியர்களின் ஜனத்தொகை அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் என தேசிய அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.

இந்தியாவின் ஜனத்தொகையில் சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தைச் சார்ந்தவர்களின் பங்கும் அதிகரித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஜெயின் மற்றும் பார்சி மதங்களை பின்பற்றுவர்களின் பங்கு குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM Modi

இந்தியா, இலங்கை, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், பூட்டான் மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையினர் பங்கு அதிகரித்துள்ளதா என இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதிலே பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய ஜனத்தொகை அதிகரித்துள்ளது மற்றும் சிறுபான்மையினர் ஜனத்தொகை குறைந்துள்ளது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே சிறுபான்மையினருக்கு அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையினரை விட மேலான சூழல் உள்ளது என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர்.

ஆகவே இந்த விவகாரம் அரசியல் ரீதியாக தாக்கத்தை உண்டாக்கும் எனவும் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தேர்தல் சமயத்திலேயே ஏன் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன. ஓ பி சி, தலித் சமுதாயங்கள் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீட்டை இஸ்லாமியருக்கு காங்கிரஸ் விநியோகிக்கிறது என பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த அறிக்கை தொடர்பான சர்ச்சை வரும் நாட்களில் மக்களவைத் தேர்தல் பரப்புரையை மேலும் பரபரப்பாக்கும் என கருதப்படுகிறது.