இந்தியா

புதுச்சேரி: மாநில அந்தஸ்து கோரும் அதிமுக... முழு அடைப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் அவதி!

புதுச்சேரி: மாநில அந்தஸ்து கோரும் அதிமுக... முழு அடைப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் அவதி!

webteam

புதுச்சேரியில், மாநில அந்தஸ்து கோரி, அதிமுக அழைப்பின்பேரில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால், 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சுற்றுலாப் யணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரம் இல்லை என்றும், முதலமைச்சர் ரங்கசாமி சமீபத்தில் பேசியது, புதுச்சேரி அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதையடுத்து, இந்த கோரிக்கையை கையிலெடுத்துள்ள பழனிசாமி தரப்பு அதிமுக, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து, கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து, புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அன்பழகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை, காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர், புதுச்சேரியில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே இயக்கப்படும் ஒரு சில அரசு பேருந்துகள் மட்டும் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. ஆட்டோக்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன.

இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த முழு அடைப்பு போராட்டத்தால், காலையில் திறக்கப்படும் டீக்கடைகள், உணவகங்கள் திறக்கப்படவில்லை. நேற்று காலை 10 மணிக்கு பிறகும், 90 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தன. பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டதால், புதுச்சேரிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சில உணவகங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுற்றுலா பயணிகள் உணவு சாப்பிட்டுச் சென்றனர்.

இதற்கிடையே, அதிமுகவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின்போது, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 5 பேர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.