இந்தியா

ரஃபேல் ஒப்பந்தம்... குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த டசால்ட்!

ரஃபேல் ஒப்பந்தம்... குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த டசால்ட்!

webteam

ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இடம்பெற்றது தொடர்பாக பிரான்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட தகவலுக்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் ரஃபேல் ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே தெரிவித்து இருந்தார். ஹாலண்டேவின் கருத்துக்குப் பின்னர் இந்த விவகாரம் சூடுபிடித்தது. இதனால், அனில் அம்பானிக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனை பாஜக தலைமையிலான மத்திய அரசு மறுத்தது. ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய பங்குதாரராக சேர்க்கப்பட்டதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான ‘Mediapart’ பத்திரிகை டசால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு மேற்கொண்ட ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, டசால்ட் நிறுவன ஆவணங்களில் இந்த தகவல் உள்ளதாக என மீடியா பார்ட் கூறியுள்ளது. ஏற்கனவே, ரஃபேல் விவகாரம் பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், பிரான்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவல் புதிய சர்ச்சைக்கு வித்திட்டது.

இந்நிலையில் ‘Mediapart’ பத்திரிக்கை வெளியிட்ட தகவலுக்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதில் ''ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய பங்குதாரராக சுதந்திரமாகவே தேர்வு செய்தோம். பங்குதாரர் விவகாரத்தில் எங்களுக்கு எந்த கட்டாயமும் கொடுக்கப்படவில்லை'' என தெரிவித்துள்ளது.