இந்தியா

இந்தியாவிலும் இனி கருணைக் கொலை ; உச்சநீதிமன்றத்தின் வரலாற்று தீர்ப்பு

இந்தியாவிலும் இனி கருணைக் கொலை ; உச்சநீதிமன்றத்தின் வரலாற்று தீர்ப்பு

கண்ணியத்தோடு இறக்கும் முடிவை எடுக்க அனைவருக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. பல ஆண்டு கால விவாதத்திற்கு இந்தத் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பில் , வாழவே முடியாத அல்லது உயிர் மீளாத நோயுடைய யாரும் கருணைக் கொலை செய்யப்படலாம் என கூறி , யாரைக் கருணைக் கொலைக்கு உட்படுத்தலாம், அதற்கான விதிமுறைகள் என்ன என்பதையும் விளக்கியுள்ளது. ஒரு மருத்துவக் குழு பரிசோதித்து , ஒரு நபரால் இனி உயிர் பிழைத்தல் சாத்தியமில்லை என அறிக்கை கொடுக்கும் போது கருணை கொலை செய்யலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுநல வழக்காடு மையம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றில், வாழ்வது எப்படி உரிமையோ அதே போல், இறப்பையும் ஒரு உரிமையாக அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசின் கருத்துகளை கேட்டது. மத்திய அரசு தன்னுடைய வாதத்தில் , உரிய சட்ட வழிமுறைகளோடு கருணைக் கொலையை அனுமதிக்கலாம் என்றும்; மருத்துவ குழு ஒன்றை அமைத்து அவர்களையே பொறுப்பாக்கி இதனை முடிவு செய்யுமாறு வழிமுறைகளை அமைத்தல் சரியாக இருக்கும் என தெரிவித்தது. இதனையடுத்து , கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.