இந்தியா

வீடுகளில்கூட இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை

webteam

இந்தியாவில் பெண்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பின்றி இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெண்கள் அவரது வீட்டில் பாதுகாப்பாக இல்லை என அதிர்ச்சிகரமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சர்வதேச சுகாதார மையத்தின் 2017ஆம் ஆண்டு அறிக்கையில் மூன்றில் ஒரு பெண் தனது கணவரால் உடல்ரீதியான துன்புறுத்தல் அல்லது பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் அதிகளவிலான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தேசியக் குற்ற ஆவணங்கள் காப்பக ஆணையத்தின் அறிக்கை உறுதி செய்துள்ளது. அதன்படி 2015ஆண்டில் நடைபெற்ற பாலியல் குற்றங்களில் 95.5 சதவிகிதம் குற்றங்கள் பெண்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மூலமே நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது. 

மேலும் இதுகுறித்து கடந்த வாரம் சர்வதேச சுகாதார மையம் மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இதற்கு நாட்டில் தற்போது நிலவும் பாகுபாடுகள் நிறைந்த சட்டங்கள், வறுமை, பெண்களின் நிலை, உறவுநிலைகளில் நிலவும் சமத்துவமின்மை ஆகியவை காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும் பெண்கள் இது மாதிரியான வன்முறைகள் குறித்து வெளியே சொல்ல தயங்குவதால் இது போன்ற வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவிலுள்ள ஆணாதிக்க குடும்பச் சூழல் பெண்கள் மீதான வன்முறைக்கு முக்கிய காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்தியாவில் பெண்கள் தங்களது வீட்டிலேயே பாதுகாப்பாக இல்லை என்னும் அதிர்ச்சிகரமான உண்மையை இந்த அறிக்கை பதிவு செய்துள்ளது.