இந்தியா

பினராயி விஜயனுக்கு எதிராக முழக்கமிட்ட காங். நிர்வாகிகளை தள்ளிவிட்ட கம்யூ. கட்சி நிர்வாகி!

பினராயி விஜயனுக்கு எதிராக முழக்கமிட்ட காங். நிர்வாகிகளை தள்ளிவிட்ட கம்யூ. கட்சி நிர்வாகி!

ச. முத்துகிருஷ்ணன்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமானத்தில் இருவர் முழக்கமிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்ததையடுத்து, அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கண்ணூரிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வந்த பினராயி விஜயனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு இளைஞர் காங்கிரஸார் முழக்கமிட்டனர். அவர்களை முதலமைச்சருடன் வந்த இடது சாரி கூட்டணி கட்சி தலைவர் இ.பி. ஜெயராஜன் தடுத்து நிறுத்தி, கீழே தள்ளினார். இதனிடையே இருவரையும் பிடித்து விமானத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் இவர்கள் கண்ணூர் பகுதியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர்களான நவீன் குமார் மற்றும் பர்த்தீன் மஜித் என்பது தெரிய வந்தது. இவர்கள் முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவிக்கவே விமானத்தில் எந்த விதமான சந்தேகம் ஏற்படாத வகையில் பயணச்சீட்டு எடுத்து பயணித்து வந்ததும் தெரியவந்தது. கேரளா முழுவதும் முதல்வர் ராஜினாமா செய்ய கேட்டு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் விமானத்தில் இந்த எதிர்ப்பு போராட்டம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பேசிய இடது சாரி கூட்டணி கட்சி தலைவர் இ.பி. ஜெயராஜன், “விமானத்தில் முழக்கங்களை எழுப்பிய காங்கிரசார் முதல்வரைத் தாக்க முயன்றனர். இன்று விமானத்திற்குள் நடந்தது ஒரு வகையான பயங்கரவாத செயல். இதற்குப் பின்னால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்.” என்று கூறினார்.