இந்தியா

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் குதித்த விளையாட்டு வீரர்கள்

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் குதித்த விளையாட்டு வீரர்கள்

webteam

ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் யோகேஷ்வர் தத், பாபிதா போகட் மற்றும் சந்தீப் சிங் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் களமிறங்குகின்றனர். 

ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதற்கான வேட்பாளர் தேர்வில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அந்தவகையில் ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. 

அதன்படி மொத்தம் உள்ள 90 சட்டப் பேரவை தொகுதிகளில் 78 தொகுதிகளின் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஹரியானாவின் தற்போதைய முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் கர்னல் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்தப் பட்டியில் விளையாட்டு வீரர்கள் பாபிதா போகட், சந்தீப் சிங் மற்றும் யோகேஷ்வர் தத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மல்யுத்த வீராங்கனை பாபித போகட் தாத்ரி தொகுதியில் களமிறங்குகிறார். 

முன்னாள் ஹாக்கி வீரர் சந்தீப் சிங் பிஹோவா தொகுதியில் போட்டியிட உள்ளார். மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் பரோடா தொகுதியில் களமிறங்குகிறார். பாபிதா போகட் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். சந்தீப் சிங் மற்றும் யோகேஷ்வர் தத் ஆகிய இருவரும் கடந்த 27ஆம் தேதி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.