காதலை முறித்துக்கொண்டு விலகிய பெண்ணை தீ வைத்து எரித்த நபரும் சேர்ந்து தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் செவிலியராக 24 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இவர் இளைஞர் ஒருவரை 4 வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்னர் பல்வேறு காரணங்களால் இருவரும் பிரிந்தனர். அந்த நபருடனான காதலை செவியலியர் பெண் முறித்துக்கொண்டார். ஆனால் அந்த நபர் தொடர்ந்து அப்பெண்ணை பின் தொடர்ந்து சென்றார். அத்துடன் தன்னை காதலிக்கும்படியும், திருமணம் செய்துகொள்ளும் படியும் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.
இதில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் அந்த நபர் மீது விஜயவாடா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி அந்த நபரை அழைத்து போலீஸார் எச்சரித்தனர். அவர் இனிமேல் தொந்தரவு செய்யமாட்டேன் என ஒப்புக்கொள்ள, அப்பெண்ணும் புகாரை திரும்பப்பெற்றார். ஆனால் சில நாட்களில் மீண்டும் அப்பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை கொடுக்க தொடங்கினார் அந்த நபர். இந்நிலையில் நேற்றிரவு அந்த பெண்ணை அவர் தொல்லை செய்ய, அவர் மீண்டும் காவல்துறைக்கு புகார் கடிதத்தை எழுதியிருக்கிறார்.
அப்போது தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை செவிலியர் மீது ஊற்றிய அந்த நபர், பின்னர் தீயிட்டு கொளுத்தினார். அலறித்துடித்த அப்பெண் உடனே அந்த நபரை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் இருவரும் தீயில் கருகினர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள் தீயை அணைத்தனர். இதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, 80% எரிந்த இளைஞர் அந்த இளைஞர் மீட்கப்பட்டார். அவரை விஜயவாடா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காதல் விவகாரத்தில் இளம் பெண்ணும் அவரது காதலனும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணா மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.