delhi parade twitter
இந்தியா

குடியரசு தினம்: வரலாற்றில் முதல்முறையாக டெல்லி அணிவகுப்பில் கலந்துகொள்ளும் தம்பதி!

Prakash J

நாட்டின் 75-வது குடியரசு தினம் வரும் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக குடியரசு தினத்தன்று டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற இருக்கும் அணிவகுப்புக்காக ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குடியரசு தின விழாவில் முதல்முறையாக வெவ்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த தம்பதியினர், அணிவகுப்பில் ஒன்றாக பங்கேற்க உள்ளனர்.

டெல்லி அணிவகுப்பு

நீலகிரி மாவட்டம் வெலிங்டனைச் சேர்ந்தவர் மேஜர் பிளேஸ். இவருக்கும் கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த கேப்டன் சுப்ரீதாவுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் தற்போது டெல்லியில் வசித்து வருகின்றனர். கேப்டன் சுப்ரீதா ராணுவ போலீஸ் படையிலும், மேஜர் பிளேஸ் மெட்ராஸ் ரெஜிமென்டிலும் பணியாற்றி வருகின்றனர். வெவ்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த இருவரும் தற்போது குடியரசு தின விழா அணிவகுப்பில் ஒன்றாகப் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிக்க: மகனைக் கீறிய பூனை: அடித்துக் கொன்ற தந்தை.. 8 மாத சிறைத் தண்டனையுடன் அபராதம் விதித்த நீதிமன்றம்!

இதுகுறித்து கேப்டன் சுப்ரீதா, ”இது திட்டமிட்டு நடக்கவில்லை. இது ஒரு தற்செயல் நிகழ்வு. ஆரம்பத்தில் தேர்வில் பங்கேற்று நான் தேர்வானேன். பின்னர் எனது கணவரும் அவரது படைப் பிரிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். எனது கணவர் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்தவர். நான் ராணுவ போலீஸ் படையின் ஒரு பகுதியாக இருக்கிறேன். நாங்கள் வெவ்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட்டு உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேஜர் பிளேஸ், ”2016-ஆம் ஆண்டு என்சிசி குடியரசு தின விழாவில் எனது மனைவி புதுடெல்லி கடமை பாதை அணிவகுப்பில் பங்கேற்றார். நான் 2014-ஆம் ஆண்டு பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றேன். 2024-ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் கடமை பாதையில் எனது படைப்பிரிவை வழிநடத்தி பெருமைப்படுத்துவதற்கு இது ஊக்கமளிக்கும் விதமாக உள்ளது” என்றார்.

இதையும் படிக்க: கவர் நிறைய பணம்: எழுதியிருந்த ஒற்றை வார்த்தை.. உரிமையாளரிடம் சேர்க்க புதிய யுக்தியைக் கையாண்ட நபர்!