18வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவி ஏற்றது. இதில் 2019ம் ஆண்டு முதல், நாட்டின் முழு நேர நிதியமைச்சராக இருந்து வரும் நிர்மலா சீதாராமனே மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி 12.30 வரை தாக்கல் செய்தார்.
1,00,000 வரை சம்பளம் உள்ள வேலையில் சேரும் பணியாளருக்கு, ஒரு மாத ஊதியம் முதல் மாதமே கூடுதலாக வழங்கப்படும்
4.1 கோடி இளைஞர்களுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் இளைஞர் மேம்பாட்டிற்காக ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் துறைக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பீகாரில் பல்வேறு சாலைத் திட்டங்களுக்காக ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்க உள்ளது.
தருண் பிரிவின் கீழ் கடனை வெற்றிகரமாக திருப்பிச் செலுத்திய கடனாளிகளுக்கு, முத்ரா கடன் வரம்பு தற்போதைய ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.
ஆந்திரப் பிரதேச தலைநகரின் வளர்ச்சிக்கு சிறப்பு நிதியுதவியை மத்திய அரசாங்கம் வழங்க உள்ளது. அந்தவகையில் இந்த நிதியாண்டு மற்றும் எதிர்காலத்தில் ஆந்திரப் பிரதேச தலைநகரின் வளர்ச்சிக்காக 15,000 கோடி ரூபாயை அரசாங்கம் ஏற்பாடு செய்யும்.
மேலும், ஆந்திரப் பிரதேச மூலதனத் தேவையை உணர்ந்து பலதரப்பு ஏஜென்ஸிகள் மூலம் சிறப்பு நிதி உதவியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எம்எஸ்எம்இ-களுக்கான கால கடன்களை எளிதாக்க கடன் உத்திரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் கடன் வழங்கும் போது ரூ100 கோடி வரை சுயநிதி உத்தரவாத நிதியம் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.