சபாநாயகர் முகநூல்
இந்தியா

மக்களவை சபாநாயகர் பதவிக்கான முக்கியத்துவம் என்ன?

மக்களவை தேர்தல் முடிந்து அமைச்சரவையும் உறுப்பினர்களும் பதவியேற்றுள்ள நிலையில் அடுத்த கட்ட நகர்வாக சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. அப்பதவியின் முக்கியத்துவம் என்ன? அப்பதவிக்கான அதிகாரங்கள் என்ன என்பதை தற்போது காணலாம்...

PT WEB

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மிக முக்கியமானது சபாநாயர் பதவி. மக்கள் பிரதிநிதிகளை அவையில் வழிநடத்திச்செல்வதே அப்பதவியின் அடிப்படை கடமை.

மக்களவைக்கு தேர்வான எவரும் அவையின் சபாநாயகராக தகுதி உண்டு. சபாநாயரின் அனுமதி பெற்றே எந்த ஒரு உறுப்பினரும் கேள்வி எழுப்ப முடியும். விவாதங்கள் செய்ய முடியும். உறுப்பினர்களின் பேச்சில் எது அவைக்குறிப்பில் இடம் பெற வேண்டும், எது நீக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்வதும் சபாநாயகரின் தனிப்பட்ட அதிகாரம்.

மக்களவை இருக்கைகள்

மற்ற உறுப்பினர்களுக்கு தருவது போல் இன்றி சபாநாயகருக்கும் சிறப்பு நிதியிலிருந்தே ஊதியம் தரப்படுகிறது. எனினும் சபாநாயகர் என்பவர் அப்பதவிக்கு வந்த பின்னர் எல்லா கட்சிகளையும் பாரபட்சமின்றி நடுநிலையுடன் வழிநடத்தும் கடமையும் வந்து சேர்கிறது. வாக்கெடுப்புகளின் போது இரு தரப்புக்கும் சம வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் மட்டும் சபாநாயகர் தன் வாக்கை அளிக்க சட்டம் வழிசெய்கிறது.

சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருந்த போதும் அவர் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் தகுதி நீக்கவும் சட்டம் வழி செய்கிறது. உறுப்பினர்களை தகுதி நீக்குவது சபாநாயகரின் மிக முக்கிய அதிகாரமாக இருப்பதால் அப்பதவி முக்கியத்துவமும் பெறுகிறது.

1985இல் கொண்டு வரப்பட்ட கட்சித்தாவல் தடை சட்டம் இதற்கு வழி செய்கிறது. கட்சித்தாவல் விவகாரங்களில் சபாநாயகரின் நடவடிக்கைகளில் தாங்கள் தலையிட முடியாது என்றும் எனினும் அவரது இறுதி முடிவை மட்டும் பரிசீலிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது. உறுப்பினர்கள் கட்சி தாவும் போது ஆட்சி கவிழும் அபாயங்களில் இருந்து அரசை காக்கவும் சபாநாயகரால் இயலும். குறிப்பாக யாருக்கும் தனிப்பெரும்பான்மை இன்றி கூட்டணி அரசுகள் அமையும் போது சபாநாயகர் பதவி மிகமிக முக்கியமானதாக மாறிவிடுகிறது.

எனினும் சபாநாயகர் பதவி தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க உச்ச நீதிமன்றமும் அவ்வப்போது முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டுதல்களை அளித்துவருகிறது. உதாரணமாக உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பான முடிவுகளை சபாநாயகர்கள் 3 மாதங்களுக்குள் எடுக்கவேண்டும் என்றும் அரிதிலும் அரிதாகவே இதற்கு மேல் கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது போன்ற சூழல் உள்ள நிலையில் தற்போதும் கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில் யாருக்கு சபாநாயகர் பதவி செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.